அவரு பேச்சுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! கூட்டணிக்கு வேட்டு வைத்த பிரவீன் சக்ரவர்த்தி! செல்வப்பெருந்தகை காட்டம்!
பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கும், காங்கிரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தகவல் பகுப்பாய்வுப் பிரிவு தேசியத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு கட்சியுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பிரவீன் தனிநபராக செயல்படுவதாகவும், அவரது கருத்துகள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் இண்டியா கூட்டணியில் இரு கட்சிகளும் உள்ளன. இத்தகைய நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து திமுக அரசை விமர்சிக்கும் வகையில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழகத்தின் கடன் உத்தரப்பிரதேசத்தை விட அதிகம் என்று அவர் கூறியது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கடன் நிலை கவலைக்கிடம்!! திமுகவை வம்பிழுக்கு காங்., நிர்வாகி! பிரவீன் சக்ரவர்த்தி!
இந்நிலையில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரவீன் சக்கரவர்த்தி பேசுவது தமிழக காங்கிரஸின் குரல் அல்ல. நானும், கிரிஷ் சோடங்கர், அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பேசுவதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ குரல். பிரவீன் ஏன் இப்படிப் பேசுகிறார் எனத் தெரியவில்லை.கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த தனிநபராக முயற்சி செய்கிறார்.
காங்கிரஸ் கொல்லைப்புற வழியாகவோ பின்புறமாகவோ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாது. இது தனிநபரின் விளம்பரத்துக்காகவும் வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது. இதற்கும் காங்கிரஸுக்கும் துளியளவு சம்பந்தமில்லை” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “தேசியத் தலைமைதான் கூட்டணியை முடிவு செய்யும் என்று பலமுறை கூறிவிட்டோம். ராகுல் காந்தி பெயரை கெடுக்கவோ காங்கிரஸ் பெயரை சீர்குலைக்கவோ முயல்பவர்களுக்கு இது பகல் கனவாக முடியும். இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. அதைப் பிரிக்க முடியாது. உத்தரப்பிரதேசத்தையும் தமிழகத்தையும் ஒப்பிடுவது ஏற்க முடியாது.
அங்கு புல்டோசர் ஆட்சி நடக்கிறது. பிரவீன் கூறிய உத்தரப்பிரதேச புள்ளிவிவரம் தவறு. அதை நான் மறுக்கிறேன். 2021இல் அதிமுக ஆட்சி தமிழகத்தை 4.61 சதவீத கடனில் தள்ளிவிட்டுச் சென்றது. அதை 3 சதவீதமாகக் குறைத்தது திமுக அரசு. இது நிதி ஆளுமை. இதைப் பொறுக்க முடியாமல் பொறாமையால் இப்படிப் பேசுகிறார்கள்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
பிரவீன் சக்கரவர்த்தியின் தொடர் விமர்சனங்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக காங்கிரஸ் தலைமை இதை தனிநபர் செயல் என்று ஒதுக்கி தள்ளியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இண்டியா கூட்டணியின் ஒற்றுமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: டெல்லியில் முகாமிடும் காங்., மாவட்ட தலைவர்கள்! மீண்டும் பதவியை பிடிக்க தீவிர முயற்சி!