செந்தில் பாலாஜிக்கு அடுத்து குறிவைக்கப்பட்ட பெருந்தலை - `மதுபான’ ஆலையில் திடீர் ரெய்டு...!
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் உறவினர்களுக்குச் சொந்தமான கோல்டன் வாட்ஸ் பிரைவேட் லிமிடெட் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் மதுபான கொள்முதலில் ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், திருவாரூரில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் உறவினர்களுக்குச் சொந்தமான கோல்டன் வாட்ஸ் பிரைவேட் லிமிடெட் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மதுபான ஆலைகள் உள்ளிட்ட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கருணாகவூர் பகுதியில் அமைந்துள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் உறவினர்களுக்குச் சொந்தமான கோல்டன் வாட்ஸ் பிரைவேட் லிமிடெட் மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளனவா என்பது குறித்த தகவல், சோதனை நிறைவடைந்த பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தனியார் மயமாகும் டாஸ்மாக்?! முதல்வர் விஜய் முடிவால் அரசுக்கு கொட்டப்போகும் கொள்ளை லாபம்?! முழு ரிப்போர்ட்!
திருவாரூரில் உள்ள இந்த மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்டு வரும் சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக்கோட்டை கிராமத்தில் கால்ஸ் என்ற தனியார் மதுபான ஆலை அமைந்துள்ளது. இந்த தனியார் மதுபான ஆலை சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மதுபான ஆலையில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மதுபானங்கள் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்திற்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கால்ஸ் மதுபான ஆலையானது ஜெர்மனி நாட்டின் தொழில்நுட்பத் தரத்துடன் முழுமையாக தானியங்கி மயமாக்கப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இங்கு தயாரிக்கப்படும் உயர் ரக மதுபானங்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலையில் இன்று காலை முதல் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பீட்டர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள இந்த கால்ஸ் தொழிற்சாலைக்கு தொடர்புடைய இடங்களில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும்,
அரசு மதுபான கடைகளுக்கு உரிய ரசிதுகள் இல்லாமல் முறைகேடாக மது பாட்டில்களை விற்பனை செய்தது தொடர்பாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையும் திமுகவில் நெருக்கமானவர்களுக்கு தொடர்புடையது எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10 'PARTY FUND' வசூல்? செந்தில் பாலாஜியை துருவி துருவி விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்!