ராகுல் எச்சரித்தும் கேட்கவில்லை! திருச்சி காங்கிரசில் கோஷ்டி மோதல்; பொதுக்கூட்டம் ரத்து!
ராகுலின் இந்த எச்சரிக்கை வெளியாகிய சில நாட்களிலேயே திருச்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலும், அதனால் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலை தவிர்க்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரித்திருந்த நிலையில், திருச்சி மாவட்ட காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி மோதல் காரணமாக இன்று நடைபெற இருந்த கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் இளையராஜா, லால்குடி நகர தலைவர் ஆனந்த் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தின்போது மாவட்ட தலைவர் சரவணனின் செயல்பாடுகளுக்கு சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, சட்டசபை தேர்தல் பணிகளில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், தங்களை புறக்கணித்துவிட்டு வேறு நிர்வாகிகளை வைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் ராகுல்காந்தி! காங்., நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு! மாமல்லபுரத்தில் இன்று பேசப் போவது என்ன?
மேலும், தற்போது பொதுக்கூட்டத்துக்கு தொண்டர்களை அழைத்து வருமாறு தங்களிடம் எதிர்பார்ப்பது எப்படி நியாயம் என நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சுமார் 40 நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, மாவட்ட மேலிட பொறுப்பாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரிடம் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த கோஷ்டி மோதல் காரணமாக, திருச்சியில் இன்று நடைபெற இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பணிகள் தீவிரமாகி வரும் நிலையில், பொதுக்கூட்டத்தை நடத்துவதற்குள் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பயிற்சி முகாமில் பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு கோஷ்டி பூசல் மிகப்பெரிய தடையாக இருப்பதாக எச்சரித்திருந்தார். கட்சியினரை அரவணைத்து செயல்படாதவர்களுக்கு இனி இடமில்லை என்றும் அவர் கூறியிருந்ததாக தகவல் வெளியானது.
ராகுலின் இந்த எச்சரிக்கை வெளியாகிய சில நாட்களிலேயே திருச்சியில் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலும், அதனால் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதும் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் ராகுல்காந்தி! தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றம்! 77 புதிய மாவட்ட தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி!