அமமுகவுக்கு 9 தொகுதி?! டிடிவி தினகரனுக்கு அமித்ஷா கொடுத்த ஆஃபர்?! கூட்டணி கணக்கு!
அதிமுக - பாஜக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை "துரோகி" என்று கடுமையாக விமர்சித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் மீண்டும் அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைந்துள்ளார்.
இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய தினகரன், "தமிழ்நாட்டின் நலனுக்காக பங்காளி சண்டையை ஓரங்கட்டிவிட்டோம். தொகுதி பங்கீடு அனைத்தும் சுமூகமாக நடத்தப்படும் என்று நம்பிக்கை உள்ளது. அனைவரும் இணைந்து ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்" என்று தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய தினகரன், "எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை" என்று கூறி வெளியேறினார். அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு "துரோகத்திற்கான நோபல் பரிசு" வழங்க வேண்டும் என்றும், "எடப்பாடியுடன் கூட்டணிக்கு செல்வதற்கு பதிலாக தூக்கில் தொங்கிவிடலாம்" என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: டிடிவி என்ட்ரியால் என்ன கிடைக்கும்? அதிமுக - பாஜக கூட்டணிக்கு அமமுக தரும் தாக்கம் என்ன?
இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின. ஆனால் எடப்பாடி பழனிசாமி-அமித் ஷா இடையேயான டெல்லி சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. டெல்லியில் அமித் ஷாவிடம் தினகரனை கூட்டணியில் கொண்டு வருவதற்கான சமிக்ஞைகளை எடப்பாடி காட்டியதாக தகவல்கள் வெளியாகின.
தினகரன் தரப்பில் அமித் ஷாவிடம் "இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்" என்று கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 9 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தினகரன் தரப்பில் திருப்தி ஏற்பட்டுள்ளது. இணைப்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியும் தினகரனை வரவேற்று, "கூட்டணி வலுப்படும்" என்று தெரிவித்தார்.
தினகரன் வருகையின் தாக்கம் என்ன? தென் தமிழகத்தில் முக்குலத்தோர் (தேவர்) சமுதாய வாக்குகளில் தினகரனுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக 50.32% வாக்குகளை பெற்று அதிமுக-திமுக இருவரையும் வீழ்த்தியவர்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து 5.38% வாக்குகளை பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக-தேமுதிக கூட்டணி 2.3% வாக்குகளை பெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 0.90% வாக்குகளை பெற்றாலும், தேனி தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து 2-ஆம் இடம் பிடித்து அதிமுகவை 3-ஆம் இடத்திற்கு தள்ளினார்.
தினகரன் வருகை தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு சிதறலை தடுக்கும் என்றும், மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் (ஜனவரி 23) பிரதமர் மோடி முன்னிலையில் தினகரன் மேடையில் இருப்பது கூட்டணியின் ஒற்றுமையை காட்டும் என்றும் என்டிஏ தலைவர்கள் நம்புகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அணி பலவீனமடைந்துள்ள நிலையில், தினகரன் இணைப்பு என்டிஏவுக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தரப்பில் இதை "கூட்டணி குழப்பம்" என்று கருதினாலும், தேர்தல் களம் இப்போது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. தினகரன்-எடப்பாடி உறவு எப்படி இருக்கும்? தென் தமிழக வாக்குகள் என்டிஏவுக்கு செல்லுமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகின்றன.
இதையும் படிங்க: டிடிவி என்ட்ரியால் என்ன கிடைக்கும்? அதிமுக - பாஜக கூட்டணிக்கு அமமுக தரும் தாக்கம் என்ன?