×
 

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

பழனிசாமியால் அதிருப்திக்கு உள்ளானதாக கருதப்படும் நிர்வாகிகள் மற்றும் நீண்ட காலமாக கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என நினைப்பவர்களையும் தினகரன் தரப்பு அணுகி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை: தமிழக அரசியலில் அ.தி.மு.க.வுக்குள் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த அக்கட்சியின் நிர்வாகிகளுடன் அ.ம.மு.க. பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ளவர்கள் மற்றும் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டதாக கருதப்படும் நிர்வாகிகளை தினகரன் தரப்பு அணுகி வருவதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் அதிருப்தி அணியினர் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும், தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரும் த.வெ.க.வில் இணைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்த அ.ம.மு.க. தரப்பு முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: 5 அதிமுக எம்.எல்.ஏ.க்களை குறிவைக்கும் தவெக! ஏற்கனவே 6 பேர் தாவிய நிலையில் மீண்டும் அதிரடி! பின்னணியில் நடப்பது என்ன?

அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, தொடர் தேர்தல் தோல்விகளால் கட்சியில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை பயன்படுத்தி, பழனிசாமிக்கு அரசியல் நெருக்கடி கொடுக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, தினகரனை மீண்டும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தும் கட்சிக்குள் சிலரால் முன்வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போதைய சூழலில் தினகரன் அவசரமாக எந்த நடவடிக்கையிலும் இறங்க விரும்பவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் பழனிசாமிக்கு எதிராக அவசரமாக மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பலனை தராத நிலையில், இந்த முறை பொறுமையாக செயல்பட தினகரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகவே, “அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் ஒரே இயக்கம்” என்ற கருத்தை தினகரன் தொடர்ந்து முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தனது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் தென் மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, பழனிசாமியால் அதிருப்திக்கு உள்ளானதாக கருதப்படும் நிர்வாகிகள் மற்றும் நீண்ட காலமாக கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என நினைப்பவர்களையும் தினகரன் தரப்பு அணுகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நகர்வுகள் குறித்து பழனிசாமி தரப்புக்கும் தகவல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய நிலையில் தினகரனை நேரடியாக எதிர்த்து அரசியல் மோதலை உருவாக்க பழனிசாமி விரும்பவில்லை என்றும், அதே நேரத்தில் அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அ.தி.மு.க.வில் ஏற்கனவே அதிருப்தி, கட்சி தாவல், கூட்டணி கணக்குகள் என பல்வேறு சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், தென் மாவட்ட நிர்வாகிகளை தினகரன் அணுகி வருவதாக வெளியாகியுள்ள தகவல் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினகரனின் இந்த நகர்வு எதிர்காலத்தில் அ.தி.மு.க.வுக்குள் மேலும் தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது தற்போதைய அரசியல் சூழலை பயன்படுத்தி தனது கட்சியை மட்டுமே பலப்படுத்தும் முயற்சியாக முடிந்துவிடுமா என்பது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில்தான் தெரியவரும்.

இதையும் படிங்க: அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும்! நேபாள பேரிடர் குறித்து எடப்பாடி பழனிசாமி உருக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share