×
 

1.15 மணி நேரம் நடந்த தவெக தோழமைக் கட்சிகளின் மீட்டிங்... விஜய் எடுத்த 3 முக்கியமான முடிவுகள்... என்னென்ன?

தோழமைக் கட்சிகளுடனான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நல்ல தொடக்கம் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து

முதலமைச்சர் விஜய் தலைமையில், தமிழக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தோழமைக் கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசு பொறுப்பேற்று சுமார் 50 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், ஆளுங்கட்சிக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற முக்கிய ஆலோசனையாக பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, அரசின் செயல்பாடுகள், எதிர்கால அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: இந்தக் கூட்டம் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டமாகும். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் தங்களது கருத்துகளை முதல் கட்டமாக பரிமாறிக் கொண்டனர்.

இதையும் படிங்க: கோவளத்தில் முடிந்த மெகா ஆலோசனை... விஜய் கூட்டணிக்கு அடித்தளம்..! தோழமைக் கட்சியினர் பேட்டி..!!

எங்களைப் பொறுத்தவரை, 50 நாட்களுக்குப் பிறகு நடைபெற்ற இந்தத் தோழமைக் கட்சிகளின் கூட்டம் மிகவும் நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. கூட்டம் மிகவும் நேர்மறையான (Positive) மற்றும் நட்புறவான சூழலில் நடைபெற்றது. இந்த அரசு அமைவதற்கு ஆதரவு அளித்த அனைத்து கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதலாவதாக, தற்போது ஆதரவு அளித்து வரும் கட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதை மூன்று நிலைகளாக பார்க்கிறோம். முதல் நிலை, அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள். இரண்டாவது நிலை, தாவேகா தலைமையில் தோழமைக் கட்சிகளாக இணைந்து செயல்படும் கட்சிகள். மூன்றாவது நிலை, முறையான கூட்டணியை உருவாக்கி, ஒரு அரசியல் முன்னணியாக செயல்படும் நிலை.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நேர்மறையான சூழலில் கூட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்காக மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்காக அனைத்து தலைவர்களும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

முதலாவதாக, தோழமைக் கட்சிகளுக்காக ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  இரண்டாவதாக, அனைத்து கட்சிகளும் பின்பற்றக்கூடிய ஒரு பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. மூன்றாவதாக, இந்த அரசியல் அமைப்புக்கு பொருத்தமான பெயர் சூட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த மூன்று அம்சங்கள் குறித்தும் விரைவில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். இது ஒரு ஜனநாயகபூர்வமான அமைப்பு என்பதால், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதே எங்களின் நடைமுறையாகும். எனவே, அடுத்த கூட்டத்தில் இதுகுறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும். இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியா கூட்டணி குறித்து நேற்று தெரிவித்த நிலைப்பாடே இப்போதும் தொடர்கிறது. நாங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளோம்.

தாவேகாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கும் சூழல் உருவானவுடன், அவர்கள் இந்தியா கூட்டணியில் இணைவது தொடர்பாக அப்போது உரிய ஆலோசனைகள் நடத்தப்படும்.

தற்போது நாங்கள் பேசிக் கொண்டிருப்பது தமிழ்நாட்டு அரசியலைப் பற்றியது. தமிழ்நாட்டில் தாவேகா தலைமையில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து உருவாகியுள்ள அரசைப் பற்றியும், அந்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்தும், தோழமைக் கட்சிகளின் செயல்பாடு குறித்துமே இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அல்லேரி நீரேற்று திட்டம்..! ஜவ்வாது மலையை தாரை வார்ப்பதா.? சீமான் ஆவேசம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share