ஜெம் வீரமணி விவகாரம்... யாரும் தப்பிக்க முடியாது..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!
ஜெம் வீரமணி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி, சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய கிரானைட் தொழில்துறையில் நீண்ட காலமாக செல்வாக்கு மிக்க தொழிலதிபராக அறியப்பட்டவர். அவரது வயது எண்பத்து நான்கு. இந்த வழக்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. சென்னையில் உள்ள ஒரு குழந்தை உரிமை ஆர்வலர், ஒரு பென் டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
அதில் ஒரு வயதான நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகள் இருந்தன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணையில் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வீடியோ 2019 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்து, வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் 2026 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. வீடியோவில் தோன்றிய நபர் ஜெம் வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை தனது தொழில் தொடர்புடைய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். அந்த வீட்டில் சிறுமிகளை அழைத்து வந்து வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2026 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். ஜெம் வீரமணி விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கு தற்போது தீவிர விசாரணையில் இருக்கும் நிலையில் இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு மது விற்கலாம்... "கள்" இறக்க கூடாதா..! என்ன நியாயம் CM..? சீமான் கேள்வி.!
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இந்த விவகாரம் தொடர்பாக பேசும்போது, லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அரசியல் புள்ளிகளாக இருந்தாலும் சரி, எந்தத் தயவு தாட்சண்யமும் இல்லாமல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது அவரது தெளிவான நிலைப்பாடு. வயது, செல்வாக்கு அல்லது பதவி போன்ற காரணங்களை முன்வைத்து யாரும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த வழக்கு முதல்வரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!