திரும்பி வராத விருப்ப மனுக்கள்!! மிரட்டும் மாவட்ட செயலாளர்கள்!! அதிருப்தியில் தவெக தொண்டர்கள்!
தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலர்கள் மிரட்டியதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள் பலரும், அதை திருப்பித் தரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ள நிலையில், கட்சியின் உள்ளேயே பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. மாவட்டச் செயலர்கள் மிரட்டல் காரணமாக, விருப்ப மனு வாங்கிய பல நிர்வாகிகள் அவற்றை திருப்பி ஒப்படைக்கவில்லை என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
த.வெ.க. சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 6 முதல் 20 வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மனு வாங்க கட்டணமாக ரூ.100, நிரப்பி ஒப்படைக்க ரூ.10,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் நாளே ஒரு மணி நேரத்தில் 10,000 மனுக்கள் விற்றுத் தீர்ந்ததாக கட்சி அறிவித்தது. ஆனால் அதன் பிறகு எத்தனை மனுக்கள் விற்றன, எத்தனை திரும்ப பெறப்பட்டன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: தவெகவுக்கு தாவிய மகன்!! மாஜி அமைச்சர் தர்மசங்கடம்!! அதிமுக ஐடி விங் டு விஜய் கட்சி! முன்னாள் சபாநாயகர் மகன் ஜம்ப்!
விருப்ப மனு வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அவற்றை நிரப்பி திரும்ப கொடுக்கவில்லை. இதற்கு மாவட்டச் செயலர்களே காரணம் என்று கட்சி வட்டாரங்கள் குற்றம்சாட்டுகின்றன. கட்சியில் 120 மாவட்டச் செயலர்கள் உள்ளனர்.
தேர்தல் செலவை விஜய் ஏற்க உள்ளதாக தகவல் பரவியதால், அவர்களே வேட்பாளர்களாக களமிறங்க முடிவு செய்துள்ளனர். விஜய், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் தவிர்த்து, 80 தொகுதிகள் வரை பொதுச் செயலர் ஆனந்த் தேர்வு செய்து விட்டதாக தகவல்.
மற்றவர்கள் மனு கொடுக்கக் கூடாது என மாவட்டச் செயலர்கள் கடும் மிரட்டல் விடுத்துள்ளனர். "மனுக்களை வழங்கினால் கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள்" என்று எச்சரித்துள்ளனர். இதனால் விஜய் பெயரில் மனு கொடுக்க திட்டமிட்டிருந்த பலரும் அவற்றை திருப்பி கொடுக்காமல் வைத்துள்ளனர். திமுக, அதிமுக மாவட்டச் செயலர்கள் பாணியில் த.வெ.க. மாவட்டச் செயலர்களும் நடந்து கொள்வதால் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கட்சியின் முதல் தேர்தல் என்பதால், வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விஜய் நேரடியாக தலையிட்டு நிலைமையை சீர்செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிட்டால் கட்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே உள் மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த அதிருப்தி த.வெ.க.வுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: விருப்பமனு வித்தது 50,000, வந்தது எவ்வளவு? தவெகவுக்கு தீராத தலைவலி! அப்செட்டில் விஜய்!!