“என்னை ஓரங்கட்டுகிறார்கள்!” சட்டசபையில் ஆனந்த் கொட்டித் தீர்த்தது ஏன்? தவெக வட்டாரத்தில் பரபரப்பு
தனது துறையின் செயலர் மாற்றப்பட்ட விவகாரத்திலும் தன்னிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற வருத்தத்தை அவர் நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சென்னை: முதல்வர் விஜயை சுற்றியுள்ள சிலரால் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் விரக்தியே, தவெக கட்சிக்காக தான் செய்த பணிகளை சட்டசபையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் நீண்ட நேரம் பட்டியலிட காரணம் என கட்சி வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
கடந்த 19-ம் தேதி சட்டசபையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து சுமார் 70 நிமிடங்கள் பேசிய அமைச்சர் ஆனந்த், தனது துறை சார்ந்த பணிகளை மட்டுமின்றி, தவெக உருவாக்கம் மற்றும் தேர்தல் பணிகளில் தான் ஆற்றிய பங்களிப்புகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
கடந்த பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்தது, பல்வேறு முக்கிய நபர்களை தவெகவில் இணைக்க முதல்வர் விஜயிடம் வலியுறுத்தியது, சட்டசபை தேர்தலில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கச் செய்தது உள்ளிட்ட விஷயங்களை அவர் குறிப்பிட்டார். குறிப்பாக செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்த பின்னணியிலும் தனது பங்கு இருந்ததாக ஆனந்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு நிதி இல்லை! எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மட்டும் எப்படி? தவெக அரசை விளாசிய உதயநிதி!
அமைச்சரின் இந்த பேச்சு சட்டசபையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே கவனத்தை ஏற்படுத்தியது. துறை சார்ந்த அறிவிப்புகளை விட, கட்சிக்காக தான் செய்த பணிகளை அவர் நீண்ட நேரம் பேசியது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுவதாவது, முதல்வர் விஜயுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் ஆனந்த், தற்போது கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் குறைந்து வருவதாக கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக முதல்வரை சுற்றியுள்ள சிலரின் செயல்பாடுகளால் தனது பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை என்ற வருத்தம் அவருக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்வரை நேரடியாக சந்திப்பதில் சில கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், இதனால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆனந்த் அதிருப்தியில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனது துறையின் செயலர் மாற்றப்பட்ட விவகாரத்திலும் தன்னிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற வருத்தத்தை அவர் நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான் சட்டசபையில் தனது மனதில் இருந்தவற்றை ஆனந்த் வெளிப்படையாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அமைச்சர் ஆனந்தின் பேச்சுக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இதனால், அவரது 70 நிமிட உரை தவெக உள்கட்சி அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள்! அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? மாஜிக்களை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!