பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக ஊழல் பட்டியல்?! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக! அமைச்சர் மரிய வில்சன் அதிரடி!
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை வெளியிட உள்ளதாக தமிழக வெற்றி கழக (தவெக) நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை துறைமுகம் தொகுதியில், முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 'முதல்வரின் கரம்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் நிதி அமைச்சர் மரிய வில்சன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.
விழாவில் பேசிய மரிய வில்சன், முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற நாளிலிருந்தே ஊழல் இல்லாத, வெளிப்படையான ஆட்சியை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறினார். அந்த இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாகவும், எதிர்கால தலைமுறைக்கு லஞ்சம், ஊழல் என்ற வார்த்தையே தெரியாத சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!
மேலும், வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாக தணிக்கை அறிக்கையுடன் தி.மு.க. ஆட்சியின் ஊழல் பட்டியலை வெளியிட உள்ளதாகவும், அந்த அறிக்கையில் இடம்பெறும் விவரங்கள் சட்டமன்றத்தில் வெளியாகும் போது அனைவருக்கும் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
நீட் தேர்வு தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் கல்வி வாய்ப்புகளை பாதுகாக்கும் நோக்கில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு காண தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தாலும், தங்களது பதில் ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் இருக்கும் என கூறினார்.
விழா முடிந்த பிறகு செய்தியாளர்கள், ஊழல் பட்டியலில் என்னென்ன விவரங்கள் இடம்பெறும் என்று கேட்டபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று மரிய வில்சன் பதிலளித்தார். மேலும், மக்களுக்கு முழுமையான நன்மை அளிக்கும் வகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாராகி வருவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவிரி விஷயத்தில் விஷப்பரீட்சை வேண்டாம்... கர்நாடகா போகாதீங்க... ஸ்டாலின் எச்சரிக்கை..!!