வார்த்தைக்கு வார்த்தை ‘ஜெயலலிதா’... சசிரேகாவால் டென்ஷன் ஆன தவெக... செங்குன்றத்தில் பரபரப்பு...!
திமுகவினர் தான் தவிட்டு தற்குறிகள் செங்குன்றம் அருகே 100 நாள் சாதனை கூட்டத்தில் சசிரேகா பேச்சு
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாதவரம் எம்எல்ஏ விஜய்பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய செய்தி தொடர்பாளர் சசிரேகா பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், தற்போதெல்லாம் மக்கள் சீரியலை கூட விட்டுவிட்டு சட்டமன்ற கூட்ட தொடரின் லைவை பார்க்கிறார்கள் என்றும், அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயை 50 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய விட்டிருந்தால் திமுக எதிர்க்கட்சியாக கூட வந்திருக்க முடியாது என்றார்.
திமுக வாய் திறந்தாலே பொய் தான் எனவும், வாயை திறந்தாலே வடை தான் சுடுகிறார்கள் என்றார். தொகுதி வரையறை அமலுக்கு வந்தால் 3ல் இரண்டு பங்கு பெண்களுக்கு கொடுப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என்று அண்மையில் அமித்ஷா முன்னிலையில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.
திமுக நீட்டை ஒழிப்பேன், நகைக்கடன் தள்ளுபடி என பல உறுதிமொழி அளித்து ஒன்று கூட செய்யவில்லை என்றும், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் செல்வானாம் என்பது போல உள்ளது எனவும், 90 நாளில் என்ன அறுத்தீர்கள் என கேட்கிறீர்கள், நீங்கள் என்ன அறுத்தீர்கள் என திமுகவிற்கு கேள்வி எழுப்பினார். என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளேன் என கூறிய முதலமைச்சர் விஜய், ஊழல் செய்ய மாட்டார் என்றார். அண்ணா ஆரம்பித்த பேரியக்கத்தை கோபாலபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பம் ஆக்கிரமித்து கொண்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு கொடுங்க! மழையால் தவிக்கும் விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த இபிஎஸ்!
எடுபிடி பழனிசாமி திமுகவிடம் பணம் வாங்கி கொண்டு அதிமுகவை அடகு வைத்து விட்டார் எனவும், திமுகவிடம் கூட்டணி வைத்து முதலமைச்சராக பார்த்த எடுபிடி பழனிசாமி, இந்த தேர்தலோடு வீட்டிற்கு செல்வார் என்றார். எப்படி எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லையோ, அது போல விஜய் இருக்கும் வரை தீய சக்தி திமுக தலை தூக்க முடியாது என்றார். பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என சிங்கப்பெண் படை, போதை பொருள் தடுப்பு படை என உருவாக்கி உள்ளதாக கூறினார்.
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் ஒரு வார்த்தை கூட விவசாயத்தை பற்றி பேசாத உதயநிதி, எதற்கு பால்டாயில் குடித்தார் என கூறவா என்றும், ஜெயலலிதா வழியில் வந்தவர் தான் விஜய் எனவும், கோபாலபுரம் குடும்பம் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக் எனவும், அண்ணா ஆரம்பித்த இயக்கத்தை கபாலீகரம் செய்தவர்கள் திமுகவினர் என்றும், திமுகவினர் நீதிபதி அணி என ஒன்று வைத்துள்ளார்கள் எனவும், நீதிபதியாக பிச்சை போட்டவர்கள் திமுக என ஆர். எஸ். பாரதி பேசியதாக கூறினார்.
தஞ்சாவூர் கூட்டத்தில் பேசியது நீ தானே, தைரியமாக சென்று கைதாக வேண்டியது தானே என உதயநிதி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா ஆட்சியின் போது, கச்சதீவு, காவிரி விவகாரத்தை பற்றி பேசினாலே திமுகவினர் வெளிநடப்பு செய்வார்கள், அது போல தற்போது DELIMITATION அல்லது DMK FILES என பேசினாலே திமுகவினர் சட்டமன்றத்தில் இருந்து வெளியே சென்று விடுவார்கள் என்றார். தொகுதி மறுவறையரை குறித்து திமுக பல்டி அடித்துள்ளார்கள் என சாடினார். ஜெயலலிதா இருந்த போதே 500 கடை தான் மூடினார், ஆனால் தற்போது விஜய் ஆட்சியில் 100 நாளில் 717 கடைகள் மூடப்பட்டுள்ளன என்றார்.
ஆண்டிற்கு 50000கோடி ரூபாய் திமுகவினர் கொள்ளையடித்தனர் என்றார். முதலமைச்சர் காப்பீடு என்பது ஆண்டிற்கு 25லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். திமுகவினர் தான் தவிட்டு தற்குறிகள் எனவும், 1 லட்சத்திற்கு எத்தனை பூஜ்ஜியம் என தெரியாதவர்கள், அவர்களுக்கு கொள்ளை அடிக்க மட்டுமே தெரியும் என்றார். ஆண்டிற்கு 100 நாட்கள் சட்டமன்றம் நடத்தப்படும் என கூறிய திமுக 100 நாட்கள் நடத்தவில்லை எனவும், எந்த பயமும் இன்றி சட்டமன்றத் தொடரை லைவ் செய்து வருகிறார் தலைவர் விஜய் என சசிரேகா கூறினார்.
தொடர்ந்து மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் விஜய்பிரபு பேசுகையில் வயதில் மிக சிறியவன் வெற்றிபெற்ற நிலையில், பச்சை மிளகாய் சிறியதாக உள்ளது என எடுத்து கடித்துவிட்டு வயிறு எரியுது என அவதி வேண்டாம் என்றும், எங்கெல்லாம் பிடுங்கினீர்களே எங்கெல்லாம் அடிக்கும் ஷாக் எனவும், எங்கெல்லாம் தொண்டினீர்களோ அங்கு விழுந்து விடுவீர்கள் என்றும், திமுக, அதிமுகவை பிடுங்கி போட்டுவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும் என்றார். மேலும் கிரிக்கெட் பார்ப்பது போல மக்கள் தற்போது சட்டமன்ற கூட்டத் தொடரை பார்த்து கொண்டுள்ளனர் எனவும் விஜய்பிரபு கூறினார்.
இதையும் படிங்க: "தமிழக முதல்வரின் பவர் சென்டர் த்ரிஷா"..! ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..!!