×
 
☰

இந்தி ஆதிக்கம்..? சீர்குலையும் இருமொழிக் கொள்கை..! வேல்முருகன் தாக்கு.!

தமிழகத்தின் இருமொழிக் கொள்கை சீர்குலைக்கப்படுவதாக வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை சீர்குலைக்கப்படுவதாகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலை முதல் அரசு மருத்துவமனைகள் வரை இந்தி நுழைவதும், கோயில் பெயர்ப்பலகையில் தமிழ் தொடர்பான சர்ச்சை எழுந்ததும், மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளிலேயே கொள்கைக்கு முரணான செயல்பாடுகள் நடைபெறுவதை வெளிப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெற்ற பலகை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அந்த இந்தி எழுத்துகள் அகற்றப்பட்டன. இரு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பிரச்சினை ஓய்வதற்குள், கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து உறைகளில் மருந்து உட்கொள்ளும் முறை உள்ளிட்ட விவரங்கள் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் அச்சிடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

2025 டிசம்பரில் அச்சிடப்பட்ட இந்த உறைகளின் பயன்பாட்டை நிறுத்த மருத்துவமனை நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.இத்தனை மாதங்களாக அரசு மருத்துவமனைகளுக்குள் இந்தி இடம்பெற்றதை நிர்வாகம் கவனிக்காமல் இருந்ததா அல்லது தெரிந்தே அனுமதித்ததா என்ற கேள்வியை வேல்முருகன் எழுப்பியுள்ளார். இந்தி அச்சிடப்பட்ட மருந்து உறைகளைத் தேர்வு செய்து அரசுப் பணத்தில் கொள்முதல் செய்தது யார், அச்சு மாதிரியைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார் என்பதை அரசு விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு முறையும் இந்தியை அரசுத் துறைகளுக்குள் நுழையவிடுவது யார், இந்தித் திணிப்புக்குத் துணைபோகும் அந்த அதிகாரிகள் யார் என்பதை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

அரசு நிர்வாகக் கட்டமைப்புக்குள் இந்தி நுழைவதற்கான பாதையாகச் செயல்படுபவர்கள் யார் என்றும், மக்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும் கீழ்மட்ட அதிகாரிகளை மட்டும் பலிகடாவாக்கிவிட்டு பின்னணியில் முடிவெடுத்தவர்களைப் பாதுகாக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்நிலையில் மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நுழைவாயிலில் தமிழ் எழுத்துகள் அகற்றப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையும் கூடுதல் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசு தரப்பில் தமிழ் அகற்றப்படவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், அந்தப் பெயர்ப்பலகையில் உண்மையில் என்ன மாற்றம் செய்யப்பட்டது, அதற்கான ஆவணங்கள் என்ன என்பதை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த எங்களை புறக்கணிப்பதா? – த.வெ.க. தலைமைக்கு எதிராக அதிருப்தி குரல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share