தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!
'துாத்துக்குடி மாவட்டத்தில், த.வெ.க., தான் வெல்லும்' என, சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் துாத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி பதிவிட்டுள்ளது, தி.மு.க., கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குள் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பதிவில் அவர், “தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, திருச்செந்தூர் தொகுதிகளில் 40 முதல் 45 சதவீத ஓட்டுகளைப் பெற்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) வெற்றி பெறும். ஒட்டுமொத்தமாக த.வெ.க. 25 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறும்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி பெறுவது உறுதி. விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தால் அது வெற்றிகரமான கூட்டணியாக இருந்திருக்கும். நல்ல வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டுவிட்டது. வரும் லோக்சபா தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸுக்கு வெற்றி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தலைமை தேர்தல் அதிகாரியை பணி நீக்கம் செய்யணும்! மீண்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி! ஞானேஸ்குமாருக்கு சிக்கல்!
மேலும், “காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு மாற்றுக் கட்சிக்காக வேலை செய்பவர்கள், உள்ளிருந்தே கட்சியை கறையான் போல் அரிப்பவர்கள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்தப் பதிவு தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க. உடனான கூட்டணி நீடிக்காது என்பதாலேயே காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் இத்தகைய பதிவுகளை செய்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ராகுல் காந்தி தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து பிரசாரம் செய்யாதது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் “த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டோம்” என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
த.வெ.க. தரப்பில் இருந்து வரும் ஓட்டு விவரங்கள் கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரின் இந்தப் பதிவு இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் புதிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தவெகவை தவறவிட்டதால் ராகுல்காந்தி விரக்தி! திமுக கூட்டணியை உறுதி செய்த பா.சிதம்பரத்தை தவிர்க்க முடிவு?!