அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!
வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்டதை மறைத்து முதல்வர் விஜய் உடனே நிறைவேற்றுவேன் என்று கூறியதாக உதயநிதி உளறுகிறார் எனத் தவெக கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற தருணத்தில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற உரிய கால அவகாசம் வேண்டும் என்று மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கேட்டுக் கொண்ட உலகறிந்த உண்மையை அடியோடு மறைத்துவிட்டு, ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விடுவேன் என்று முதலமைச்சர் விஜய் கூறியதாகத் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போகிற போக்கில் உளறிக் கொட்டி வருவதாகவும், அரசியல் அறிவோ முதிர்ச்சியோ சிறிதும் இல்லாத பண்ணையார் வீட்டுக் குழந்தையான உதயநிதிக்குத் தவெக குறித்துப் பேச எந்த யோக்கியதையும் இல்லை என்றும் ஆளும்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகக் கடுமையான வார்த்தைகளில் சாட்டையடி கொடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அனல் பறக்கும் கண்டன அறிக்கையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, முந்தைய ஆட்சியாளர்களின் முறைகேடுகளால் சீர்குலைந்து கிடந்த அரசு கஜானாவின் நிலையை உணர்ந்து, 'தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள மக்கள் நல வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக, படிப்படியாக முழுமையாக நிறைவேற்றப்படும்; அதற்கு மக்கள் தகுந்த கால அவகாசம் தர வேண்டும்' என்று நாடறியத் தெளிவாகப் பிரகடனம் செய்தார்.
இது தமிழகத்தின் கடைக்கோடி குடிமகனுக்கும் தெரிந்த நிதர்சனம். ஆனால், சுய சிந்தனையோ, அரசியல் புரிதலோ, நிதானமோ துளியும் இல்லாத பண்ணையார் வீட்டுக் குழந்தையான 'உளறல் நிதி', முதல் நாளே எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுவதாக முதல்வர் விஜய் கூறியதாகப் பச்சைப் பொய்யைத் துணிந்து மேடைகளில் உளறித் திரிகிறார்" என்று கிழித்துத் தொங்கவிட்டுள்ளது.
இதையும் படிங்க: முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!
தொடர்ந்து உதயநிதியின் அரசியல் பாணியைக் கடுமையாகத் தோலுரித்துள்ள தவெக, "ஆபாசநிதியே! உன் பெயர்களின் வரிசையில் 'பொய்நிதி' என்பதுதான் முதல் பெயரா?. எந்தவொரு உழைப்பும் இன்றி, குடும்ப வாரிசு செல்வாக்கால் மட்டுமே பதவிகளை அனுபவித்து வரும் உனக்கு, மக்களைப் பற்றி என்ன தெரியும்?. ஆட்சிக்கு வந்த இந்த குறுகிய காலத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் விஜய் அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்து வருவதைக் கண்டு வயிறெரிந்து, இல்லாததையும் பொல்லாததையும் பேசி மக்களைக் குழப்பப் பார்க்கிறீர்கள்.
பொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே உங்கள் அரசியலின் முதலீட்டு நிதியாக வைத்து எத்தனை காலம் ஏமாற்ற முடியும்?. எங்களது வெற்றித் தலைவர் முதலமைச்சர் விஜய்யின் நற்பெயரைக் குலைக்க நினைக்கும் திமுகவினரின் இத்தகைய தரம் தாழ்ந்த மலிவு அரசியலுக்குத் தமிழ்நாட்டு மக்கள் வெகுவிரைவில் சம்மட்டி அடி கொடுத்துத் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று அந்த அறிக்கையில் மிக ஆவேசமாக எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: 107 தொகுதிகளில் ஜெயித்துவிட்டு பிரதமர் ஆசையா?: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!