முதல்வர் விஜய் திறந்து வைத்த உலக சாதனை மையம்! சென்னையில் தொடங்கியது புதிய கண் சிகிச்சை புரட்சி!
முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சென்டர் ஆஃப் எக்சலன்ஸில், உலகின் முதல் பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி (Pinhole Pupilloplasty) மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தை தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால், விட்ரியோ-ரெட்டினல் சேவைகள் பிரிவு இயக்குநர் டாக்டர் மனோஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிக்கலான கருவிழிப் பாதிப்புகளால் பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த மையம் செயல்பட உள்ளது. குறிப்பாக கருவிழித் தழும்புகள், சீரற்ற கருவிழி, அதிகப்படியான ஒளியியல் பிறழ்வுகள் மற்றும் சில அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு ஏற்படும் பார்வைக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளில் பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
இந்த சிகிச்சையின் முக்கிய அம்சமாக, பாதிக்கப்பட்ட கருவிழியை முழுமையாக மாற்றுவதற்குப் பதிலாக, கண்மணியில் மிகச்சிறிய அளவில் துல்லியமான துளை உருவாக்கப்படுகிறது.
இதன் மூலம் தேவையற்ற ஒளியியல் பிறழ்வுகளின் தாக்கம் குறைக்கப்பட்டு, மையமாக வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரையை அடைய உதவுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிகிச்சைக்கு தானமாக பெறப்படும் கருவிழித் திசுக்கள் அவசியமில்லை என்பதும் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது. உலகளவில் கருவிழி கொடையாளர்களுக்கான பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில், இதுபோன்ற மாற்று சிகிச்சை முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதற்கிடையே, முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது அவரைக் காண ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்தனர். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குள் அவர் சென்றபோது, வெளியே காத்திருந்த பொதுமக்களை நோக்கி கை அசைத்தபடி சென்றார். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.
கண் மருத்துவத் துறையில் புதிய சிகிச்சை நுட்பங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், சிக்கலான கருவிழிப் பாதிப்புகளுக்கு மாற்று சிகிச்சை வாய்ப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!