×
 
☰

வடலூரில் வள்ளலார் 204-வது அவதார திருநாள் தொடங்கியது! சன்மார்க்கக் கொடியேற்றத்தால் களைகட்டிய விழா!

வடலூருக்கு வரும் பக்தர்களுக்கு வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலையின் அணையா அடுப்பு மூலம் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் 204-வது அவதார திருநாள் விழா சன்மார்க்கக் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. வள்ளலார் அவதரித்த மருதூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கொடியேற்றம் நடைபெற்ற நிலையில், வடலூர் சத்திய ஞான சபையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ராமலிங்க அடிகளார் என அழைக்கப்படும் வள்ளலார், 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 18-ம் தேதி வடலூர் அருகே உள்ள மருதூரில் அவதரித்தார். பின்னர் வடலூரில் சத்திய சன்மார்க்க சங்கம் மற்றும் சத்திய ஞான சபையை நிறுவி, சன்மார்க்கம் மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் குறித்து மக்களுக்கு போதித்தார்.

வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆண்டுதோறும் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளில் தைப்பூச பெருவிழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வடலூருக்கு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாதி, மதம் வேறுபாடுகளை கடந்த மனிதநேயம்!! வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!

வடலூருக்கு வரும் பக்தர்களுக்கு வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலையின் அணையா அடுப்பு மூலம் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வள்ளலாரின் 204-வது அவதார திருநாளை முன்னிட்டு, அவர் அவதரித்த மருதூர், தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி, சத்திய தருமசாலை மற்றும் வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகம் உள்ளிட்ட இடங்களில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சத்திய ஞான சபையை அமைப்பதற்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் மக்கள் சீர்வரிசை தட்டுகளுடன் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் வடலூர் சத்திய ஞான சபையில் கடந்த மாதம் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, வள்ளலார் அருளிய திருவருட்பா அகவல் பாராயணம் நடைபெற உள்ளது. இதையடுத்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளன. அவதார திருநாளையொட்டி வடலூர் முழுவதும் பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களின் வருகையால் ஆன்மிக சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: அக்.,11ல் சென்னை வரும் பிரதமர் மோடி! இளையராஜாவுக்கு கிடைக்கும் முக்கிய கவுரவம்! முழு விவரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share