மதுரை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தாரா ஆளுநர் அர்லேகர்?! திமுக - தவெக மோதலால் பூதாகரமான வைகை விவகாரம்!
'கலெக்டர் உள்ளிட்டோருடன் கவர்னர் ஆலோசனை நடத்தவில்லை. அவர்கள் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தனர்' என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்தது.
மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவர்னர் ஆர்.வி. அர்லேக்கர், வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையைக் கண்டு வருத்தம் தெரிவித்தார். “யாரும் முன்வரவில்லை என்றால் லோக்பவன் தலைமையில் வைகை ஆற்றை மீட்டெடுக்க முயற்சி எடுக்கும்” என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவர்னர் விமான நிலையத்தில் இருந்து ரிங் ரோடு வழியாக வைகை கரையோரம் வந்தபோது, அவருக்கு உதவியாளர் ஆற்றைக் காட்டினார். அப்போது ஆற்றில் நீர் இல்லாத காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய கவர்னர், மதுரை இளைஞர்கள் வைகை ஆற்றை சுத்தப்படுத்த முன்வர வேண்டும் என்றும், இல்லையெனில் லோக்பவன் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம் செய்தார். “கவர்னரின் இந்த அசட்டு துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம். மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும்” என்று அவர் அறிக்கை வெளியிட்டார்.
இதையும் படிங்க: எனக்கு தெரியாம எதுக்கு இப்படி பண்ணீங்க!! உதயநிதி ஸ்டாலின், சபரீசனை கடிந்துகொண்ட மு.க.ஸ்டாலின்!
இதனால் கொதிப்படைந்த த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார், “கவர்னர் மாநில நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. லோக்பவனில் என்ன வேலை இருக்கிறதோ அதை மட்டும் செய்தால் போதும்” என்று பதிலடி கொடுத்தார். வரும் காலங்களில் அதிகாரிகள் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் அனுமதியின்றி கவர்னரின் ஆய்வுக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது. “கவர்னரை மரியாதை நிமித்தமாக மட்டுமே கலெக்டர், கமிஷனர் மற்றும் எஸ்.பி. சந்தித்தனர். எந்த ஆய்வும் நடைபெறவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் த.வெ.க. அரசுக்கும் ராஜ் பவனுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வைகை ஆற்றின் நிலை மக்கள் மத்தியில் நீண்டகாலமாக விவாதிக்கப்படும் பிரச்சினை என்பதால், கவர்னரின் பேச்சு பெரும் கவனம் பெற்றுள்ளது.
அரசியல் வட்டாரங்கள் இந்த சர்ச்சை தமிழக அரசியலில் புதிய விவாதங்களுக்கு வழி வகுக்கும் என்று கருதுகின்றன.
இதையும் படிங்க: யாரையும் காப்பாத்த வேணாம்! தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!