"இரட்டை குதிரை சவாரியா?" – திருமாவளவனை மறைமுகமாக தாக்கிய வைகோ! கூட்டணியில் வெடித்த புதிய சர்ச்சை!
தி.மு.க., - த.வெ.க., என, இரட்டை குதிரைகளில் சவாரி செய்யும் வி.சி.க., தலைவர் திருமாவளவனை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ மறைமுகமாக தாக்கி பேசியதால், இருவரிடையே மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ளது.
தமிழக அரசியலில் மீண்டும் கூட்டணி அரசியல் விவாதம் சூடுபிடித்துள்ளது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சமீபத்தில் திருமாவளவன், தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு கட்சிகளும் தேசிய அளவிலான கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், தி.மு.க.வுடனான நட்பு தொடரும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு வைகோ, “இந்த கருத்துக்காக, திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்” என்று கிண்டலாக கூறியிருந்தது கவனம் பெற்றது.
இந்த சூழலில், ம.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சங்கொலி’ 30-வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க இருப்பதாக கூறியிருந்த திருமாவளவன், கடைசி நேரத்தில் வர முடியாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரது இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: தவெக அரசு மீது விஷக் கணைகள்... கூட்டணி கட்சிகளும் தான் காரணம்.. வைகோ விமர்சனம்..!
விழாவில் உரையாற்றிய வைகோ, “கடந்த சில நாட்களாக முதல்வர் விஜய் மீதும், த.வெ.க. அரசு மீதும் விஷக்கணைகளை, எதிரிகளின் வட்டாரங்களில் இருந்து மட்டுமல்லாது, கூட்டணி கட்சிகளின் வட்டாரங்களில் இருந்தும் பிரயோகிக்கின்றனர். தி.மு.க. ஆட்சியின்போது, உங்கள் விஷப் பாணங்கள் எங்கே போயின; அப்போது ஏன் வீசவில்லை? கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிற கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளங்குகிறது.
கூட்டணி என வந்த பின், முதல்வர் விஜய் மீதோ, அமைச்சர்கள் மீதோ, ஒரு விமர்சனத்தைக்கூட அக்கட்சி வைத்தது இல்லை. விமர்சிக்க விரும்பினால், அமைச்சரை பார்த்து சொல்லுங்கள்; ஏன் முதல்வரை சந்தித்து கூட சொல்லலாம். ஊடகங்களில் எதற்காக தினமும் சொல்கிறீர்கள்; விமர்சனம் செய்கிறீர்கள்? நம் தயவில் தான் விஜய் ஆட்சி நடக்கிறது; எந்த நேரத்திலும் கவிழ்க்கலாம் என கருதுகிறீர்களா; என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள். ஆறு மாதங்களில் தேர்தல் வரும் என மிரட்டுகின்றனர். நான் சவால் விடுகிறேன்; தேர்தல் வரட்டும், 180 தொகுதிகளில் விஜய் அணி வெற்றி பெறும்” என்று பேசினார்.
வைகோவின் இந்த பேச்சு, திருமாவளவனை மறைமுகமாக குறிவைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதனால் கூட்டணிக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இந்த விவகாரத்திற்கு திருமாவளவன் தரப்பிலோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்திலோ அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், வைகோவின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைத் தொகுப்பு..! தலைமைச் செயலகத்தில் விஜய் - வைகோ சந்திப்பு..!