மு.க.ஸ்டாலினுடன் வைகோ, சண்முகம் சந்திப்பு! அறிவாலயத்தில் நடந்த மீட்டிங்! 2026 தேர்தல் அப்டேட்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் இன்று சந்தித்தனர்.
சென்னை: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் டிசம்பர் 16-ஆம் தேதி (இன்று) சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது வைகோ, ஜனவரி 2-ஆம் தேதி முதல் மதிமுக சார்பில் தொடங்க உள்ள மதுஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடைபயணத்தின் அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார். இந்த நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைக்குமாறு வைகோ கேட்டுக்கொண்டார். நடைபயணம் திருச்சியில் தொடங்கி மதுரையில் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மது ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சமூகக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயணத்தை மதிமுக ஏற்பாடு செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா என்பது குறித்து திமுக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சியான மதிமுகவின் இந்த முயற்சியை திமுக ஆதரிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விஜயின் கனவு மண்கோட்டை தான்... PAPER BOAT- ல கரையை கடக்க முடியுமா? வைகோ விமர்சனம்...!
அதே சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம், ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்பு (குடிமனை) பட்டா வழங்குதல் தொடர்பான கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துரைத்தார். இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய அங்கம் வகிக்கின்றன. 2026 சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பை திமுக தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மது ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற சமூகப் பிரச்னைகளில் திமுக அரசு ஏற்கெவே பல நடவடிக்கைகளை எடுத்து வருவதால், வைகோவின் நடைபயணம் அரசுக்கு ஆதரவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: “நாக்கை அடக்கி பேசுங்க அமித் ஷா...” - எங்கள உடைச்சி துடைச்சி போட்டுடுவீங்களா? - வைகோ ஆவேசம்...!