×
 

ஒன்னு வடதுருவம்! இன்னொன்னு தென்துருவம்! எப்படி ஒண்ணா இருக்க முடியும்?! திருமாவுக்கு வைகோ பதில்!

தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் ஓரணியில் திரள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியது தனக்கு தூக்கி வாரிப்போட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து தாம் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருமாவளவன் கூறியதாக வெளியான தகவல்தான் தன்னை அதிர்ச்சியடையச் செய்ததாக விளக்கம் அளித்தார்.

சமீபத்தில், "தவெகவும், திமுகவும் அகில இந்திய அளவில் ஒரே அணியில் இணைய வேண்டும்" என்று திருமாவளவன் கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய வைகோ, அந்த தகவலைக் கேட்டபோது தனக்கு "தூக்கி வாரிப்போட்டது" போல இருந்ததாக கூறினார். "வடதுருவமும், தென் துருவமும் ஒன்றாக இணைய முடியுமா?" என்று கேள்வி எழுப்பிய அவர், அந்த அரசியல் சாத்தியக்கூறே தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

மேலும், "திமுக கூட்டணியில் இருந்து கொண்டே ஆட்சியில் அமைச்சரவையிலும் இருப்போம்; அதே நேரத்தில் வேறு அரசியல் அணியுடனும் இணைவோம் என்ற கருத்து உலக அரசியலிலேயே அரிதான ஒன்று. அதனால்தான் திருமாவளவனுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று நகைச்சுவையாக கூறினேன். அவரை புண்படுத்தும் எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை" என்று வைகோ விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: "நோபல் பரிசு கொடுக்கலாம்"..! திருமா மீதான விமர்சனம்..! திரும்பப் பெறுவதாக வைகோ அறிவிப்பு..!

திருமாவளவனுடன் தனக்கு நீண்டகால அரசியல் நட்பும் நெருக்கமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "அவர் அரசியலில் வளர வேண்டும் என்பதற்காக என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். கடந்த 15 ஆண்டுகளாக அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறேன். எதிர்காலத்திலும் அதே உறவு தொடரும்" என்றார்.

தனது கருத்தால் திருமாவளவனின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், "நோபல் பரிசு" என்ற வார்த்தையை முழுமையாக திரும்பப் பெறுவதாகவும் வைகோ தெரிவித்தார்.

அதே நேரத்தில், மதிமுகவின் அரசியல் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். திமுக கூட்டணியில்தான் தொடர்ந்து இருப்போம்; திமுகவுடனான அரசியல் உறவும் தொடரும் என்றார். இதன் மூலம் அண்மையில் எழுந்த அரசியல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைகோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: "மலை முழுங்கி மகாதேவன் ஆச்சே..." - செந்தில் பாலாஜியை சிங்கிள் பாயிண்டில் டேமேஜ் செய்த வைகோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share