'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து! மத்திய அரசு வழங்கும் கவுரவம்!
நம் நாட்டின் தேசிய பாடலான, 'வந்தே மாதரம்' பாடலுக்கு, தேசிய கீதமான, 'ஜன கண மன'விற்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
நாட்டின் தேசிய பாடலான “வந்தே மாதரம்” பாடலுக்கு, தேசிய கீதமான “ஜன கண மன”க்கு இணையான அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு தேசிய அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1875 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி “வந்தே மாதரம்” பாடலை இயற்றினார். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்த பாடல் போராட்ட வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. பின்னர் 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி, “வந்தே மாதரம்” நாட்டின் தேசிய பாடலாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்த பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதமும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் முன் “வந்தே மாதரம்” பாடல் கட்டாயமாக ஒலிக்க வேண்டும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், “வந்தே மாதரம்” பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், தேசிய கீதத்தை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் “வந்தே மாதரம்” பாடலையும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், “வந்தே மாதரம்” பாடப்படும் போது அவமதிப்பு செய்வது அல்லது இடையூறு ஏற்படுத்துவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாறும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழிவகுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: "NO CASH"...! 100% FAST TAG..! புதிய விதிகள் இன்று முதல் அமல்..!!