அமைச்சர் என்.ஆனந்த் கூட்டத்தை புறக்கணித்த வன்னியரசு... சிறுத்தையை ஓரங்கட்ட தயாராகிறதா தவெக?
விசிக திண்டிவனம் எம்.எல்.ஏ வும் சமூக நீதி அமைச்சருமான வன்னியரசு பங்கேற்காதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் பாமக எம்.எல்.ஏ க்கள் சிவக்குமார், கணேஷ்குமார் பங்கேற்றனர்.
ஆனால் விசிக திண்டிவனம் எம்.எல்.ஏ வும் சமூக நீதி அமைச்சருமான வன்னியரசு பங்கேற்காதது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதேபோன்று, அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏ க்கள் 4 பேரும் புறக்கணிப்பு. மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
ஆய்வுக்கூட்டம் தொடங்கியவுடன் த.வெ.க வினர் பத்திரிகையாளர்களுடன் சென்று கூட்டத்தை ரீல்ஸ் எடுத்தனர்.அதே போன்று சுற்றுலா மாளிகையிலும் அமைச்சர்க்கு வரவேற்பு அளிக்க பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை நெருங்க விடாமல் கட்சியினர் முண்டியடித்து நின்றனர். அமைச்சர் வருவதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் வரும் வழி நெடுகில் வாசனை திரவியம்(ஸ்பிரே) அடித்தனர்.
இதையும் படிங்க: அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?" அமைச்சர் கீர்த்தனா மீது சீமான் தாக்கு!
காரணம் இதுவா?
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனாவுடன் பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகம் வந்த அன்புமணி ராமதாஸை அறையின் வாசலுக்கு வெளியே காத்திருந்து வரவேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனம் ஈர்த்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகராக கூறப்படும் ஜான் ஆரோக்கியசாமியும் பங்கேற்றார். அன்புமணி, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோர் நடத்திய ஆலோசனையில் ஜான் ஆரோக்கியசாமியும் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும், மேகதாது அணை பிரச்சனையை தீர்க்க புதிய நடுவர் மன்றம் தேவையற்றது என அன்புமணி கூறி வருகிறார். புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக இணக்கமான முடிவை ஏற்படுத்த அமைச்சர்கள் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஈடுபட்டதாக கூறினாலும், பாமகவை தவெக கூட்டணிக்குள் இணைக்க முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் பாமக இணைவதாக பேச்சு கிளம்பிய போதே, விடுதலை சிறுத்தைகள் கூட்டணியை விட்டு வெளியேறும் என திருமாவளவன் தெரிவித்திருந்தார். தற்போது தவெக கூட்டணிக்கு பாமக வரும் பட்சத்தில், விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் எனக்கூறப்படுகிறது. இதனால் பாமகவுடனான தவெக அமைச்சரின் சந்திப்பு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி கவிழ்ப்பு சதி..! சம்மனை தவிர்த்த செந்தில் பாலாஜி..! முன்ஜாமீன் கேட்டு மனு..!