அதானியின் அல்லேரி திட்டம்..! ஜவ்வாது மலையை விற்பதா..? வெளுத்து வாங்கிய வேல்முருகன்..!
ஜவ்வாது மலை விவகாரத்தில் வேல்முருகன் போர்க்கொடி தூக்கி உள்ளார்.
அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் ஜவ்வாது மலையை விற்க கூடாது எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் அரசம்பட்டு காப்புக்காடு பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டம், ஒரு சாதாரண மின் உற்பத்தித் திட்டம் அல்ல என்றும் இது தமிழ்நாட்டின் முக்கியமான காடுகளில் ஒன்றான ஜவ்வாது மலைச் சுற்றுச்சூழல் அமைப்பையும், நீராதாரங்களையும், விவசாயத்தையும், பல்லுயிர் வளத்தையும் நீண்டகால பாதிப்புக்கு உள்ளாக்கும் அபாயம் கொண்ட திட்டம் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வேளாண் பல்கலை.யில் காலி பணியிடங்கள்..! சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்துங்க..! வேல்முருகன் வலியுறுத்தல்..!!
திட்ட ஆவணங்களின்படி, சுமார் 337 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என்று கூறியுள்ள அவர், அதில் 228 எக்டேருக்கும் அதிகமான பகுதி அரசம்பட்டு காப்புக்காட்டுக்குள் அமைந்துள்ளது. மேலும், 1800 மெகாவாட் திறன் கொண்ட இந்த நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக, மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட இருப்பதாக குறிப்பிட்டார்.
ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளுக்கு இடையிலானச் சுற்றுச்சூழல் வழித்தடத்தின் ஒரு பகுதியாக விளங்கும் இந்தப் பகுதியில், அரிய பறவைகள், விலங்குகள், ஊர்வன, தவளையினங்கள் மற்றும் பல ஓரிடவாழ் உயிரினங்கள் வாழ்வதாகவும் இவற்றின் வாழ்விடங்களைச் சிதைப்பது, ஒரு காட்டை மட்டும் அழிப்பதல்ல. ஒரு முழுமையான இயற்கைச் சங்கிலியை உடைப்பதாகும் என்றார்.
எனவே, அரசம்பட்டு காப்புக்காட்டை பாதிக்கும் அதானி நிறுவனத்தின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளையும் தமிழக அரசு நிராகரிப்பதோடு, இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து, சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்தை, முழுமையாகக் கைவிடத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பள்ளிக்கரணை பேராபத்து...! சதுப்பு நிலக் கட்டிடம் கூடாது... வேல்முருகன் வலியுறுத்தல்..!!