துணை ஜனாதிபதி தேர்தல் - முதல்வரின் முடிவே என் முடிவு.. கமல்ஹாசன் எம்.பி கருத்து..!!
துணை ஜனாதிபதி தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுதான் என்னுடைய முடிவு என்று எம்.பி கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களால் கடந்த ஜூலை 21ம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 9ம் தேதி முன்கூட்டியே துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான அட்டவணையை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிட்டது. வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 7 முதல் 21 வரை நடைபெறும், மனுக்கள் 22-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு, 23-ம் தேதி திரும்பப் பெறலாம். வாக்குப்பதிவு செப்டம்பர் 9ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்; அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
துணை ஜனாதிபதியை மக்களவை (543 உறுப்பினர்கள்) மற்றும் மாநிலங்களவை (233 தேர்ந்தெடுக்கப்பட்ட + 12 நியமன உறுப்பினர்கள்) உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழு ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கிறது. வேட்பாளர் இந்திய குடிமகனாகவும், 35 வயது நிறைவு பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: திருச்சி சிவா? மயில்சாமி அண்ணாதுரை? I.N.D.I.A கூட்டணி வேட்பாளர் யார்? நீடிக்கும் இழுபறி!!
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். NDA-வின் 450+ எம்.பி. ஆதரவால் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்தியா கூட்டணி வேட்பாளர் தேர்வுக்காக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடத்தியது. திமுக, தமிழர் வேட்பாளரை வலியுறுத்தியபோதும், ஆந்திராவைச் சேர்ந்த சுதர்ஷன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார், இது NDA-வுக்கு சவாலாக கருதப்படுகிறது. ஜகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவசேனாவின் சஞ்சய் ராவத், தன்கரின் பதவி விலகல் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கோரியுள்ளார். இந்த தேர்தல் இந்திய அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனின் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், துணை ஜனாதிபதி தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுதான் என்னுடைய முடிவு” என்று தெரிவித்தார். திமுக கூட்டணியின் ஒருங்கிணைந்த முடிவை ஆதரிப்பதாகவும், அதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த நிலைப்பாடு, திமுக கூட்டணியுடனான அவரது உறுதியான பிணைப்பையும், தமிழகத்தின் அரசியல் களத்தில் அவரது செல்வாக்கையும் வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: தமிழருக்கு போட்டியாய் தமிழர்!! பாஜகவுக்கு Tough கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!! களம் இறங்கும் திருச்சி சிவா?