"நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், லால்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாகப் பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்கள் திரைமறைவில் நடந்து வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளார். ஆட்சி அமைப்பது தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியின் போது, "நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் ஆட்சி அமைப்பார்" என்று அவர் உறுதியாகக் கூறியது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: "முதல்வர் விஜய் வாழ்க": பனையூர் தலைமை அலுவலகத்தில் தவெக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்" என அறிக்கை வெளியிட்டுள்ள சூழலில், லீமா ரோஸின் இந்தக் கருத்து கூட்டணிக் கணக்குகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தவெக 108 இடங்களைப் பெற்றுள்ள போதிலும், பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் சில இடங்கள் தேவைப்படுகின்றன. விஜய் ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதே வேளையில், அதிமுக 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தவெக மற்றும் அதிமுக இடையே உடன்பாடு ஏற்பட்டால் அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமையும்.
தற்போது தவெக தரப்பில் காங்கிரஸ் மற்றும் பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், லீமா ரோஸின் இந்தப் பேட்டி அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தையும், மற்ற அரசியல் கட்சிகளிடையே ஒருவித குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மே 4 வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த முக்கிய அட்வைஸ்! பனையூர் கூட்டத்தில் பரபரப்பு!