பிரதமர் விஜய் கனவுக்கு சிபிஎம் செக்? ராகுல் காந்தியை முன்னிறுத்தி கூட்டணிக்குள்ளேயே எதிர்ப்பு? புதிய சிக்கல்?
2029 தேர்தலை இலக்காக வைத்து விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக தவெக ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. வடமாநிலங்களிலும்
டெல்லி: 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய அரசியலில் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதங்கள் இப்போதே தொடங்கியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் அடுத்த மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றால், தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்திக்கு பிரதமர் பதவிக்கு உரிமை கோரும் தார்மீக முன்னுரிமை இருப்பதாக எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாகவே பிரதமர் யார் என்ற விவாதத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, முதலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய அரசியல் திட்டம் குறித்தும் அரசியல் வட்டாரங்களில் விவாதம் அதிகரித்துள்ளது. 2029 தேர்தலை இலக்காக வைத்து விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாக தவெக ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. வடமாநிலங்களிலும் கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவர்களின் குரலை கேளுங்கள்!! மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி வைத்த அதிரடி கோரிக்கை!
இந்த சூழலில், விஜய் பெயர் எதிர்கால பிரதமர் பதவிக்கான வாய்ப்பாக பேசப்படுவது தனக்குத் தெரியும் என எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அது வேறு வகையான அரசியல் விவாதம் என்றும், அதில் தான் தற்போது செல்ல விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1996-ம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தபோதைய அரசியல் சூழலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது ஜோதி பாசுவை பிரதமராக்குவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் விவாதம் நடைபெற்றதாகவும், தங்களிடம் இருந்த அரசியல் பலத்தை மட்டும் அடிப்படையாக வைத்து பிரதமர் பதவிக்கு உரிமை கோருவது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகே பிரதமர் யார் என்பது குறித்து கூட்டாக முடிவு செய்ய வேண்டும் என்பதே சிபிஎம்மின் நிலைப்பாடாக அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் கூட்டணி அரசியலின் ஒரு பகுதியாக இருக்கும் சிபிஎம்மின் இந்த கருத்து, 2029-ல் தேசிய அளவில் களம் காணும் திட்டம் குறித்து தவெக எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சவால்கள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!