முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!
முந்தைய விசாரணையின்போதும், வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் நீதிபதி கூறினார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யாவிட்டால், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த தேர்தல் வழக்குகள் தொடர்பான விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?
ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி தேர்தல் வழக்குகளை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டிய கட்டுப்பாடு இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஏற்கனவே முந்தைய விசாரணையின்போதும், வழக்குகளை நிராகரிக்கக் கோரும் மனுக்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் நீதிபதி கூறினார்.
இதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பிலும், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மட்டும் அவகாசம் வழங்கினார்.
அதற்குள் சம்பந்தப்பட்ட நிராகரிப்பு மனுக்களை தாக்கல் செய்யாவிட்டால், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வழக்குகள் 6 மாத கால வரம்புக்குள் முடிக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் இரு தரப்பும் என்ன முடிவு எடுக்கின்றன என்பது அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அமித்ஷா முகத்திற்கு நேராகவே சொன்ன சி.எம். விஜய்.. தமிழகத்தின் முக்கிய திட்டத்திற்கு வந்த திடீர் சிக்கல்...!