தவெக தலைமையில் அமைகிறது கூட்டணி ஆட்சி! முக்கிய துறைகளுக்கு குறி! விஜய் தீவிர ஆலோசனை!
கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து, மூத்த நிர்வாகிகளுடன், விஜய் தீவிர ஆலோசனை செய்து வருகிறார்.
தமிழக அரசியல் சூழலில் முக்கிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற பெரும்பான்மை இலக்கை எட்ட முடியாததால், கூட்டணி ஆதரவு அவசியமாகியுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை தொடர்ந்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள கட்சி தேர்தல் மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனாவின் இல்லத்தில் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.
காங்கிரஸ் கட்சி தனது ஐந்து எம்.எல்.ஏ.க்களுடன் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. ஆனால், அது மட்டுமே போதுமானதாக இல்லாததால், பிற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தற்போதைய எதிரணி கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அணுகுமுறை தீவிரமாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சிறுபான்மையினர் ஓட்டுகளை கொத்தாக அள்ளிய தவெக!! சி.ஜோசப் விஜய் செய்த மேஜிக்!!
இந்த கட்சிகள் ஆதரவு அளிக்க முன்வந்தாலும், முக்கிய அமைச்சகங்களை கோருவது அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அந்த கோரிக்கைகளை ஏற்கும் நிலையில் தான் கூட்டணி உறுதி ஆகும் என கூறப்படுகிறது. இதனால், அதிகாரப் பகிர்வு குறித்து கட்சிக்குள் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.
விஜய் தலைமையிலான அணியின் முக்கிய நிர்வாகிகள், பொதுச் செயலர் ஆனந்த், வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் பல்வேறு பரிமாணங்களில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்சியை எந்த முறையிலும் அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் விஜய் செயல்படுவதால், கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் ஒரு அளவிற்கு ஏற்கப்படும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றை நினைவூட்டும் வகையில், 1954ஆம் ஆண்டு நடந்த அரசியல் சூழலை பலர் ஒப்பிட்டு பார்க்கின்றனர். அப்போது சிறிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டதைப் போல, தற்போதும் அதே மாதிரியான கூட்டணி அரசியல் உருவாகும் சாத்தியம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் அதிரடி ஆரம்பம்! சினிமாவை விட்டு முழுதாக விலகும் விஜய்!! யூகங்களுக்கு முற்றுப்புள்ளி!!