தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!
இடைத்தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று விஜய்யின் ரோடு ஷோ நடைபெறுவதால், தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகளின் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
சத்யபாமாவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ நடத்துகிறார். இதற்காக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர், சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார்.
கோவை விமான நிலையத்தை சென்றடைந்த பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாராபுரம் சென்றடைந்ததும், அங்கு நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று சத்யபாமாவுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
இதையும் படிங்க: ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!
விஜய்யின் இன்றைய பிரசாரம் தாராபுரம் மாருதி நகரில் தொடங்கி மூலனூர் வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம் வரை சாலைவழியாக சென்று பொதுமக்களை சந்திக்கும் வகையில் ரோடு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடைத்தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று விஜய்யின் ரோடு ஷோ நடைபெறுவதால், தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை–திருப்பூர் மாவட்ட எல்லைப் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். விஜய்யின் முந்தைய பிரசார நிகழ்வுகளின்போதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்ததும், தேர்தல் விதிகளின்படி பிரசார நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதையடுத்து அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவை முன்னிட்டு தேர்தல் களம் அமைதிக்கட்டத்தை நோக்கி நகரும்.
இதையும் படிங்க: சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!