×
 
☰

பட்டினப்பாக்கத்துக்கு நோ சொன்ன தமிழக அரசு? புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்று இடம் ரெடி!

இந்த இடத்தைத் தேர்வு செய்தால், அரசுக்குச் சொந்தமான நிலம் என்பதால் புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பட்டினப்பாக்கத்தில் புதிய வளாகம் அமைக்க எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், தீவுத்திடல் பகுதியில் உள்ள பல்லவன் ஹவுஸ் வளாகத்தை மாற்று இடமாக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், சுமார் 20 லட்சம் சதுரடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காகச் சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்தத் திட்டத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த மீனவக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய கட்டுமானத்தால் தங்களது பாரம்பரிய மீன்பிடித் தொழில், வாழ்வாதாரம் மற்றும் கடலுக்குச் செல்வதற்கான அணுகல் பாதிக்கப்படலாம் என்பது அவர்களின் முக்கியக் கவலையாக உள்ளது. பல்வேறு கட்டப் போராட்டங்களின் மூலம் தங்களது எதிர்ப்பையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

இதையடுத்து, மாற்று இடங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தீவுத்திடல் பகுதியில் அமைந்துள்ள 13.22 ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்லவன் ஹவுஸ் வளாகம் தற்போது முக்கியத் தேர்வாகப் பார்க்கப்படுகிறது.

இங்கு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகங்கள் மட்டுமின்றி, இரண்டு பணிமனைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த இடத்தைத் தேர்வு செய்தால், அரசுக்குச் சொந்தமான நிலம் என்பதால் புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் அருகில் இருப்பதால், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், பல்லவன் ஹவுஸ் வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அங்கு தற்போது செயல்படும் போக்குவரத்துக் கழக அலுவலகங்களையும் பணிமனைகளையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டியிருக்கும். இதற்காக கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையப் பகுதியைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஓமந்தூரார் அரசு வளாகம் அருகே புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் குறித்தும் கவனம் திரும்பியுள்ளது. முன்னதாக அங்கு கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலக வளாகம் பின்னர் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கடந்த காலங்களில் குயின் மேரி கல்லூரி வளாகம், கொட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களிலும் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும், பல்லவன் ஹவுஸ் வளாகத்தைத் தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை. புதிய தலைமைச் செயலகம் எங்கு அமையும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து அரசு ஊழியர்களும் பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: விஜய் அரசு அறிவித்த திட்டங்களுக்கு ‘பிரேக்’? நிதித்துறை கறார்... திருப்பி அனுப்பப்படும் திட்டக் கோப்புகள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share