நெல்லையில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!! 22 வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டம்!!
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 22 வேட்பாளர்களை ஆதரித்து தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்கிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தயாராகி வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை நெல்லையில் மிகப் பெரிய பிரசார நிகழ்ச்சியை நடத்த உள்ளார். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 22 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஒரே நேரத்தில் ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ள விஜய், சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்துக்கு செல்ல உள்ளார். அங்கிருந்து கார் மூலம் நெல்லை பாளையங்கோட்டை K.T.C. நகர் 4 வழிச்சாலை மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்ட பந்தலுக்கு வருகிறார்.
அங்கு திறந்த வேனில் நின்றபடி உற்சாகமாக பிரசாரம் செய்ய உள்ளார். நான்கு மாவட்டங்களின் 22 வேட்பாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களுக்கு வாக்கு கேட்டு மக்களிடம் உரையாற்ற திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வெளிகட்சியில் இருந்து வந்தவர்கள் 106 பேருக்கு சீட்! தவெக நிர்வாகிகள் 62 பேருக்கு கல்தா!! விஜய் பாரபட்சம்!
பொதுக்கூட்டத்துக்குப் பிறகு விஜய் ரோடு ஷோ நடத்த உள்ளார். 4 வழிச்சாலை வழியாக நெல்லை தாழையூத்து நோக்கி புறப்பட்டு, திறந்த வேனில் நின்றபடியே தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, மார்க்கெட், சமாதானபுரம், K.T.C. நகர் உள்ளிட்ட பகுதிகளில் செல்ல உள்ளார். வழியெங்கும் கூடியிருக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கையசைத்து, புன்னகையுடன் ஆதரவு திரட்ட உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவை உருவாக்கும் வகையில் இன்றைய பிரசாரம் அமைய உள்ளது. விஜய்யின் வருகைக்காக நெல்லை மாவட்டத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காலையிலிருந்தே தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடத் தொடங்கியுள்ளனர்.
இந்த பிரசார நிகழ்ச்சி தென் மாவட்டங்களில் தவெகவுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விஜய்யின் தீவிர பிரசாரம் இன்று நெல்லையில் தொடங்கி, அடுத்தடுத்த நாட்களில் பல பகுதிகளுக்கும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லையில் இன்று நடைபெற உள்ள இந்த பிரசாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியில்லை! தவாகா வேல்முருகன் அறிவிப்பு!! ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பு!