×
 

ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!

இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜயை சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னை: அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்த கருத்தால் தமிழக வெற்றிக் கழகம்–காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டதாக கூறப்பட்ட சலசலப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜயை நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சுமுகமாக முடிந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முன்தினம் விஜயை மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னணி, சமீபத்தில் வெளியான தனியார் கருத்துக்கணிப்பு ஒன்றுதான் என கூறப்படுகிறது. அதில் பிரதமர் பதவிக்கான தலைவர்களில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்த இடத்தில் விஜய் இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சிலர் விஜயை வருங்கால பிரதமர் என அழைக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தியை ஆதரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கூட்டணியில் இருந்து விலகுவதுடன் அமைச்சர்கள் பதவியையும் துறக்க நேரிடும் என்றும் எச்சரித்ததாக தகவல் வெளியானது. இதனால் இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜயை சந்தித்து பேசுமாறு காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி நடைபெற்ற சந்திப்பில், கூட்டணியின் ஒற்றுமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதையும், தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை யாரும் தெரிவிக்க வேண்டாம் என்பதையும் டெல்லி மேலிடம் வலியுறுத்தியிருப்பதாக இரு தலைவர்களும் விஜயிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை விஜய் ஏற்றுக்கொண்டதாகவும், கூட்டணி குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ராஜேஷ்குமார் பேச்சால் ஏற்பட்டதாக கூறப்பட்ட கூட்டணி சர்ச்சை தற்போது தணிந்துள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் இரு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டணி ஒற்றுமையை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள் என்பதே அரசியல் வட்டாரங்களின் அடுத்த கவனமாக உள்ளது.

இதையும் படிங்க: நெசவுத் தொழிலை அழிக்கத் துடிக்கிறீங்களா.? நூல் விலை உயர்வுக்கு யார் பொறுப்பு.? வேல்முருகன் சரமாரி கேள்வி.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share