×
 

காரைக்குடி மக்களை ஏமாற்றிய விஜய்!! 6 மணி நேரம் காத்திருந்தும் பேசாமல் சென்றதால் ஏமாற்றம்!

காரைக்குடியில் பிரசார வாகனத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்திய விஜய், அங்கிருந்து பேசாமல் சென்றார்.

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) தலைவர் விஜய், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் இன்று பிரசாரம் செய்ய வந்தபோது, பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின. சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வந்த விஜய், அங்கிருந்து சாலை மூலம் காரைக்குடிக்கு வந்தார். வழியில் திருப்பத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெறும் பிரசாரக் கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மதியம் 12 மணி முதல் 2:30 மணி வரை மட்டுமே அனுமதி அளித்திருந்தார். ஆனால் விஜய் 2:30 மணிக்கு மேல்தான் பிரசார இடத்துக்கு வந்தார். காலை முதலே அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த த.வெ.க., தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிந்திருந்தனர்.

இந்நிலையில், பிரசார இடத்துக்கு அருகில் வந்த விஜய், திடீரென காரில் இருந்து இறங்கி, சிறிது தூரம் சைக்கிள் ஓட்டிச் சென்றார். இந்த எதிர்பாராத நடவடிக்கையால் தொண்டர்கள் உற்சாகமடைந்து அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இதையும் படிங்க: லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

இதனால் விஜய் சற்று தடுமாறினார். பின்னர் பிரசார வாகனத்தில் ஏறிய அவர், த.வெ.க., வேட்பாளரை தொண்டர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார். விசில் சின்னம் பதாகையை காட்டி ஓட்டு சேகரித்தார்.

எனினும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி வந்த விஜய், தொண்டர்கள் மத்தியில் எந்தப் பேச்சும் நிகழ்த்தாமல் கிளம்பிச் சென்றார். பிரசாரம் ரோடு ஷோவாக மாற்றப்பட்டது. பேசாமல் சென்றதால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இறுதியில் போலீசார், கூட்டத்தை கலைக்குமாறு அறிவுறுத்தினர்.

விஜய்யின் இந்த சைக்கிள் பிரசாரம் மற்றும் தாமதமான வருகை, த.வெ.க., தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. சிலர் அவரது எளிமையான அணுகுமுறையைப் பாராட்டினாலும், பேச்சு இல்லாததால் ஏமாற்றம் அடைந்தவர்களும் உள்ளனர்.

காரைக்குடி உள்ளிட்ட சிவகங்கை மாவட்ட தொகுதிகளில் த.வெ.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் தொடர்ந்து பிரசாரம் செய்ய உள்ளார். இன்றைய சம்பவம் தேர்தல் பிரசாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: தவெக நிர்வாகிகளும், விஜய்யும் பண்ணுறது சரியா? கட்டுக்கடங்காத கூட்டத்தால் மிரளும் போலீசார்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share