அதிமுகவில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்! மதுரையில் சசிகலா ஆக்ரோஷ பேச்சு!
மதுரை மேயர் ஊழல் புகாரில் ராஜினாமா செய்துள்ளார், புதிய மேயரை நியமிக்க முடியவில்லை, ஆனால் ஜிகர்தண்டா பற்றிப் பேசுகிறார் என முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தார்.
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் அஇபுதமமுக (AIPTMK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சக்கரவர்த்தியை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா இன்று ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுகவில் உள்ள துரோகிகள் மற்றும் திமுக அரசு மீது அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
நமது (அதிமுக) கட்சியில் துரோகிகள் அதிகமாகிவிட்டார்கள். புரட்சித் தலைவி ஜெயலலிதா இருந்தபோது நிலைமை இப்படி இல்லை. மூன்று முறை முதல்வராக இருந்தவர்கள் கூட இப்போது வேறு கட்சிக்குச் செல்கிறார்கள். அவர்களுக்குப் புத்தி புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனத் தற்போதைய அதிமுக தலைமையையும், கட்சி மாறியவர்களையும் மறைமுகமாகச் சாடினார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகக் கையெழுத்திட்ட இளைஞரை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். இதைச் செய்தது அதிமுக முன்னாள் அமைச்சர், இப்போது நடப்பது திமுக அரசாங்கம். அப்படியென்றால் நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாகிவிட்டீர்களா? எனது பிரசாரத்தை ரத்து செய்யச் சதி செய்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அஇபுதமமுக முதல் வேட்பாளர் பட்டியல்: 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் வி.கே.சசிகலா!
மதுரைக்கு வந்தால் புரோட்டா, ஜிகர்தண்டா கிடைக்கும் என்று முதலமைச்சர் பேசுகிறார். ஒரு முதல்வர் பேச வேண்டிய பேச்சா இது? எனக்குக் கேட்கவே மனக் கஷ்டமாக இருந்தது. மதுரை மேயர் ஊழல் புகாரில் ராஜினாமா செய்துள்ளார், புதிய மேயரை நியமிக்க முடியவில்லை, ஆனால் ஜிகர்தண்டா பற்றிப் பேசுகிறார் முதல்வர் என விமர்சித்தார்.
35 வருடமாக ஜெயலலிதாவுடன் இருந்துள்ளேன். எவ்வளவோ சவால்களைப் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். என்னை நான்கு வருடம் சிறையில் அடைத்தீர்கள், அதனால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தீர்களா? உங்கள் ஆட்டத்திற்கு முடிவு கட்டத்தான் நான் வந்திருக்கிறேன். மக்கள் என்னோடு இருக்கிறார்கள், எந்தச் சலசலப்புக்கும் அஞ்சமாட்டேன் என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.
2021-ல் கொடுத்த வாக்குறுதிகளில் 50 சதவீதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும், ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு திட்டத்தைக் கூடச் சரியாகச் செயல்படுத்தத் தெரியாத அரசாக இந்த விடியா அரசு உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மதுரையில் சசிகலாவின் இந்தப் பேச்சு, தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!