என்மீது கொலைவெறியில் இருக்கிறார் இபிஎஸ்!! பதவிகளை விட்டு கொடுத்தது துரோகமா? செங்கோட்டையன் கேள்வி!
முதல்வர், பொதுச்செயலர் பதவியை விட்டுக் கொடுத்தது துரோகமா?” – பழனிசாமியை கடுமையாக தாக்கிய செங்கோட்டையன்!
அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோபி தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட செங்கோட்டையன், “விஜயை ஆதரித்து அவரது வாயிலாக முதல்வராகி, 5,000 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்று பழனிசாமி நினைத்தார். அதற்கு நான் இடம் கொடுக்கவில்லை என்பதால் என் மீது கொலைவெறியில் இருக்கிறார்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் பேசுகையில், “அ.தி.மு.க.,வில் நான் இருந்தபோது, முதல்வர் பதவியையும், பொதுச்செயலர் பதவியையும் விட்டுக் கொடுத்தது பழனிசாமிக்கு துரோகமாகத் தெரிகிறதா? ஜெயலலிதா மறைந்த பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது, இரண்டு பெயர்கள் மட்டுமே முன்னுக்கு வந்தன.
இதையும் படிங்க: ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!
ஒன்று என்னுடையது, மற்றொன்று பழனிசாமியுடையது. அப்போது ‘எனக்கு முதல்வர் பதவி முக்கியமில்லை, கழகம் உடைந்துவிடக் கூடாது’ என நான் விட்டுக்கொடுத்தேன். அனைவரும் இணைந்து பணியாற்ற வழி செய்தேன்.
ஆனால் இன்று கட்சிக்காக உழைப்பவர்களையே நீக்குகின்றனர். பத்து முறை தோல்வியை சந்தித்த பழனிசாமி, என்னை துரோகி என்று அழைக்கிறார். இதை மக்களே பார்த்து முடிவு செய்யட்டும்” என்று கூறினார்.
செங்கோட்டையனின் இந்த கடுமையான தாக்குதல், அதிமுகவுக்குள் நீண்டகாலமாக இருந்த உள் மோதலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட தலைமைப் போட்டியில் தான் விட்டுக்கொடுத்ததாக செங்கோட்டையன் கூறுவது, தற்போது பழனிசாமியுடன் அவருக்கு இருக்கும் மோதலை தெளிவாகக் காட்டுகிறது.
த.வெ.க., சார்பில் கோபி தொகுதியில் போட்டியிடும் செங்கோட்டையன், தீவிர பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளார். அவரது இந்த பேச்சு, அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி அரசியலும், தனிப்பட்ட மோதல்களும் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்கச் செய்துள்ளன.
முன்னாள் அமைச்சரின் இந்த கருத்துகள், வரும் நாட்களில் அதிமுகவுக்குள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: கட்சி கொடி பிடிச்சிட்டு வந்தாதான் காசு!! கூட்டணி கட்சியினரிடம் கறார் காட்டும் திமுக! குமுறும் நிர்வாகிகள்!