பாஜக கூட்டணிக்கு வந்தால் விஜய்யை வரவேற்போம்.. ஆனால், விஜய்க்கு பாஜக ஒரு கண்டிஷன்!
தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரையில் ராம.சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீப காலங்களில் ராகுல் காந்தி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அரசியல் ஆயுதமாக இதைப் பயன்படுத்தி வந்தனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதன் பலன்கள் சமூகத்துக்கு எப்படி போகும் என்பது குறித்து ஒரு வரி கூட அவர்கள் பேசவில்லை. அதற்கு பதிலாக மோடி அரசு ஏமாற்றுகிறது எனப் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது. 15 ஆண்டுகளாக மத்திய அரசில் திமுக பங்கெடுத்துள்ளது. மாநில கட்சிகளில் மத்திய அரசில் அதிக ஆண்டுகள் பங்கெடுத்தது திமுகதான். அப்போதெல்லாம் இந்தக் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மொத்தத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புதான் நடத்தப்பட்டு வந்தது.
இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் பட்டியல் சமூகம், பழங்குடியினர் புள்ளி விவரம் மட்டும் சேகரிக்கப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையால் ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாகவும் கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் மட்டுமே மேற்கொள்ள முடியும். மாநில அரசால் கணக்கெடுப்பு நடத்த முடியாது.
அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு ஓர் ஆண்டில் முடியும். சமூக நீதி கிடைக்கவும், சமூகங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை வழங்கவும் இந்த கணக்கெடுப்பு உதவும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.5 ஆயிரம் கோடி செலவில் சர்வே முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எட்டேகால் கோடி தவறுகள் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்தக் கணக்கெடுப்பை வெளியிட முடியவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது அழுத்ததால் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது என்பது சரியல்ல. இது கண்துடைப்புக்காகவும், பிஹார் தேர்தலுக்காகவும் நடத்தப்படவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது திருமாவளவனின் கோரிக்கை. அதை பிரதமர் மோடி செய்கிறார் எனில் திருமாவளவன் பாராட்டியிருக்க வேண்டும், அவர் விமர்சனம் செய்வது தவறு.
இதையும் படிங்க: சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல்.. புட்டுப்புட்டு வைத்த திருமாவளவன்!
அதிமுக எப்போதும் பாஜக கூட்டணியில்தான் உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் தவிர்த்து, பல்வேறு தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணியில்தான் இருந்துள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. திமுகவுக்கு நடுக்கம் வந்துள்ளது. தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் உறுதியாக இருந்து எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். திமுவுக்கு எதிரான ஒவ்வொரு ஓட்டும் எங்களுக்கு முக்கியம். திமுக எதிர்ப்பு ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். திமுவை வீழ்த்த நினைக்கும் அனைவரையும் வரவேற்போம். பொது எதிரியை வீழ்த்த ஒன்று சேர்வதுதான் கூட்டணி. தேர்தல் நேரங்களில் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்க முடியாது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. தமிழகத்திலும், பிஹாரிலும் இண்டியா கூட்டணி வீழ்ச்சியடையும்.
விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. இது விஜய்க்கு புரியாது. அவருக்கு போதுமான அனுபவம் இல்லை. விஜய்யைப் பார்க்க வந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை” என்று ராம. சீனிவாசன் கூறினார்.
இதையும் படிங்க: தான் யாருன்னு மு.க. ஸ்டாலின் நிரூபிச்சிட்டாரு.. முதல்வரை புகழ்ந்து தள்ளிய திருமாவளவன்!!