×
 

மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல்: உற்சாகமான முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு நாளை இறுதிக் கட்டம்..!!

மம்தா பானர்ஜி தொடர்ந்து 4-வது முறையாக முதல்-மந்திரியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார்.

மேற்கு வங்காளத்தின் 294 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 23 அன்று 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தக் கட்டத்தில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 93.19 சதவீதம் ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது. மொத்தம் 3.61 கோடி வாக்காளர்களில் சுமார் 3.36 கோடி பேர் ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 

கூச் பெஹார் மாவட்டத்தில் 96.2 சதவீதம் என்ற அதிகபட்ச ஓட்டுப்பதிவும், கலிம்பாங் மாவட்டத்தில் 83.04 சதவீதம் என்ற குறைந்தபட்ச ஓட்டுப்பதிவும் பதிவானது. இது சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலத்தில் இதுவரை இல்லாத உயர் ஓட்டுப்பதிவு எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை (ஏப்ரல் 29) இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

9 மாவட்டங்களில் அமைந்துள்ள 142 தொகுதிகளுக்கு இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தக் கட்டத்தில் 3 கோடியே 21 லட்சத்து 73 ஆயிரத்து 837 வாக்காளர்கள் (ஆண்கள் 1.64 கோடி, பெண்கள் 1.57 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 792 பேர்) வாக்களிக்க தகுதியுடையவர்கள். அவர்களுக்காக 41,001 வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 1,448 வேட்பாளர்கள் இந்த இரண்டாவது கட்டத்தில் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: மேற்கு வங்கத் தேர்தல்: 2-ம் கட்ட பரப்புரை இன்றுடன் நிறைவு! நாளை மறுநாள் 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பவானிபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிக்கிறது. பாஜக கடுமையான போட்டியாக உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இருப்பினும், முக்கியப் போட்டி TMC மற்றும் பாஜக இடையேயே நிலவுகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவின்போது பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் இல்லை என்றாலும், சில இடங்களில் அரசியல் கட்சிகளிடையே மோதல்கள் ஏற்பட்டன. வாக்காளர்கள் மிரட்டப்பட்டதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான புகார்களும் எழுந்தன. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் TMC தொண்டர் வீட்டில் இருந்து 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாஜக வேட்பாளர் வீட்டருகே துப்பாக்கிச் சூடு சம்பவமும் நிகழ்ந்தது. இதனால், இரண்டாவது கட்டத்துக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

2,321 கம்பெனி மத்திய படையினர் உள்ளிட்ட சுமார் 2.32 லட்சம் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் மட்டும் 27,300 மத்திய படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 142 தேர்தல் பார்வையாளர்கள், 95 போலீஸ் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் 100 செலவின அதிகாரிகள் மேற்பார்வையிடுகின்றனர்.

பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக் கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டனர். உயர் ஓட்டுப்பதிவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மேற்கு வங்காளத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தத் தேர்தல் மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: தேசிய அரசியலில் தேஜஸ்வி யாதவ்! கேரளா, தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share