நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவ சதி? டெல்லி போராட்டத்தை குறிவைத்த பயங்கரவாதி? அதிர்ச்சி தகவல்!
மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட ஹமீம் மொண்டல் என்ற நபர், டெல்லி நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவி வன்முறையை தூண்ட திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் குறித்து விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் சீருடை அணிந்து ஊடுருவி வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனை கடத்த சிலர் திட்டமிட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின் போது ஜார்க்கண்டை சேர்ந்த அபிதா சர்க்கார் என்ற இளம்பெண்ணின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, கொல்கத்தாவில் பதுங்கியிருந்த ஹமீம் மொண்டல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அபிதா சர்க்காரும் கைது செய்யப்பட்டார். இருவரும் முக்கிய நபர்களை குறிவைத்து, ‘ஹனி டிராப்’ எனப்படும் காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்ய முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: எனக்கு ஹார்ட் அட்டாக் வரணும்னு பாஜக நினைக்குது! ஆனா அரசியல் போராட்டம் ஓயாது! ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி!
இதற்கிடையில், ஹமீம் மொண்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்பு இருப்பதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டம் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மேற்கு வங்க சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. கவுரவ் சர்மா கூறுகையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் ஹமீம் மொண்டல் போலீஸ் சீருடையில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கம் இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க பாஜக தலைவர்கள் உள்ளிட்ட சில முக்கிய நபர்களை குறிவைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களின் தொடர்புகள், நிதி ஆதாரங்கள் மற்றும் பின்னணிகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையின் முழுமையான தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த வழக்கு மேலும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒன்றுக்கு மூன்றாக வசூலிப்போம்!! பொதுசொத்துகள் சேதம்?! மேற்குவங்க பாஜக அரசு வார்னிங்!