×
 

15 ஆண்டுகால மம்தா சாம்ராஜ்யம் சரிந்தது! மேற்கு வங்க முதல்வரை இன்று அறிவிக்கிறது பாஜக!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

கொல்கத்தா: மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வர் யார் என்பது இன்று (மே 8) அறிவிக்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதற்கான சட்டசபை கட்சிக் கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஒடிசா முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று கொல்கத்தா வருகை தருகின்றனர்.

கடந்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 294 தொகுதிகளில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று தெளிவான பெரும்பான்மை பலத்துடன் முன்னிலை வகிக்கிறது. 15 ஆண்டுகால ஆட்சியை நடத்தி வந்த மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் தோல்வியை சந்தித்தது.

தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த மம்தா பானர்ஜி, “நான் முதல்வர் பதவியில் இருந்து விலக மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார். எனினும், அவரது அரசின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில், சட்டசபை நேற்று கலைக்கப்பட்டது. வழக்கமாக, பெரும்பான்மை ஆதரவை இழந்த முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றாலும், மம்தா அதை மறுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது பிரசாரம்! இதுவரை ரூ.510 கோடி பரிசு பொருட்கள், பணம் பறிமுதல்!!

பாஜக எம்.பி. சவுமித்ரா கான் இது குறித்து கூறுகையில், “முதல்வர் இன்று அறிவிக்கப்படுவார். அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் 3 மணிக்குள் வருகை தருகின்றனர். மாலை 4 மணிக்கு கட்சிக் கூட்டம் நடைபெறும். அதன் பின்னர் புதிய முதல்வர் பெயர் வெளியாகும்” என்றார்.

இந்த தேர்தல் முடிவு மேற்கு வங்காள அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறை ஆட்சியை தக்கவைக்க முயன்ற மம்தாவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பாஜகவின் இந்த வெற்றி மாநிலத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய முதல்வர் யார் என்பதை உறுதி செய்ய இன்று நடைபெறும் கூட்டத்தின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இதையும் படிங்க: பொது சிவில் சட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும்! மேற்குவங்கத்தில் அமித் ஷா உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share