உள்ளடி வேலையில் சிக்கிய விஜய் ஜோதிடர்! தவெகவினரே கழட்டி விட நினைப்பதால் கவலையில் ரிக்கி ரத்தன்!
தமிழக முதல்வர் விஜயின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, அதன்பின் ஏற்பட்ட கடும் விமர்சனங்களால் பதவி நீக்கப்பட்டவர், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட்.
சென்னை: தமிழக முதல்வர் விஜயின் தனிப்பட்ட அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, பின்னர் கடும் விமர்சனங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் பற்றி டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
ஒரு முன்னாள் தி.மு.க. எம்.பி. மூலம் பிரபல பா.ஜ.க. எம்.பி.க்கு அறிமுகம் செய்யப்பட்ட இவர், அந்த எம்.பி.யின் மூலம் எல்.கே. அத்வானியை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் அத்வானியின் ஜாதகத்தைப் பார்த்த ரத்தன் பண்டிட், “அடுத்த பிரதமர் நீங்கள் தான்” என்று உறுதியாகக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்வானியும், அவரது மகள் பிரதிபாவும் இந்த ஜோதிடத்தை முழுமையாக நம்பினர்.
2008-ம் ஆண்டு அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றபோது, “மன்மோகன் அரசு கவிழும், அத்வானி பிரதமர் ஆவார்” என்று ரத்தன் பண்டிட் கணித்தார். ஜூலை 22-ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது, பார்லிமென்ட் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் நிகழ்வைப் பார்த்தார் பிரதிபா அத்வானி. ஆனால், முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்ததால் மன்மோகன் அரசு தப்பித்தது.
இதையும் படிங்க: அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் விஜய்! செங்கோட்டையன் சூசகம்!
இதற்குப் பிறகும் ரத்தன் பண்டிட் அத்வானியிடம், “2009 தேர்தலில் நீங்கள் பிரதமர் ஆவீர்கள்” என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த ஜோதிடமும் பலிக்கவில்லை.
டெல்லியில் பல தொழிலதிபர்களுக்கு ஜோதிடம் சொல்லி வந்த ரத்தன் பண்டிட், சமீபத்தில் முதல்வர் விஜயின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆனால், பதவியேற்ற சில நாட்களிலேயே கடும் விமர்சனம் எழுந்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதில் த.வெ.க.வில் உள்ள சிலருக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்றும், தன்னைப் பற்றிய தகவல்களை உள்ளே இருப்பவர்களே ஊடகங்களுக்கு கொடுத்ததாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தமிழக அரசியல் மற்றும் டெல்லி வட்டாரங்களில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!