“கிறிஸ்துமஸ் விழாவுக்கு போற முதல்வர்… தைப்பூசத்துக்கு வருவாரா?” - வானதி சீனிவாசன் கேள்வி!
கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைப்பூச விழாவில் பங்கேற்பாரா? வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரைக் குறித்து, தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற (டிசம்பர் 20) கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "எந்த மதங்கள் சார்ந்தும், எந்தப் பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இது சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள். மதத்தின் பெயரில் உணர்வுகளை துாண்டுபவர்களை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள்" என வசனம் பேசியிருக்கிறார்.
மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுக என்பதுதான் கடந்த கால வரலாறு. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டுகிறோம். ஆனால், அவர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பதில்லை. குறைந்தபட்சம் இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூடச் சொல்வதில்லை. இதுபற்றிச் சட்டமன்றத்தில் பேசினால், சபாநாயகர் அப்பாவு அவர்கள் அனுமதிப்பதில்லை. இது மதங்களுக்கு இடையிலான பாகுபாடு இல்லையா? வரும் பிப்ரவரி 1ம் தேதி தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானின் தைப்பூசம் வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் தயாரா? கடுமையாக விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல் முறையாக.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்..!!
இந்து கோவில்களுக்குத் திருப்பணி செய்வது திமுகவோ, திமுக அரசோ அல்ல. இந்துக்களின் காணிக்கையில், நன்கொடையில்தான் திருப்பணி நடக்கிறது. இந்துக்கள் தங்களது கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய அவலம் உள்ளது. அப்படி கேட்டால் லஞ்சம் கேட்கிறார்கள். இதுதான் அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் லட்சணமா?
தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசுதான். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தாமல் அராஜகத்தில் ஈடுபட்டது திமுக அரசு. இதுதான் திமுகவின் மதச்சார்பின்மையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கிறிஸ்துமஸ் விழாவில் கடைசியாக, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் SIR பற்றிப் பேசி. தனது ஓட்டு பசியை வெளிப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். "சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளைத் திமுகவினர் சேர்ப்பார்கள். கவலை வேண்டாம்" எனப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் இனிதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "போலி வாக்காளர்களைச் சேர்த்து வெற்றி பெறுவோம்" என்பதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூடகமாகப் பேசியிருக்கிறார். இது தேர்தல் ஆணைத்திற்கு விடுக்கப்பட்ட சவால் மட்டுமல்ல, மிரட்டல் என்றும் விமர்சித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பை, அவரது போதனைகளைப் பேசாமல், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மீண்டுமொரு முறை இந்து மக்களின் விரோதி என நிரூபித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!