×
 

மனு அளித்தும் நடவடிக்கை இல்லை! தலைமை செயலகத்தில் பெண் பகீர் செயல்! முதல்வர் தனிப்பிரிவில் குவிந்த கூட்டம்!

சென்னை தலைமை செயலகம் முன்பு முதல்வர் தனிப்பிரிவில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தலைமைச் செயலகம் முன்பு, முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்த பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த பெண்ணை மீட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

திங்கட்கிழமை என்பதால், முதல்வர் தனிப்பிரிவில் மனுக்களை அளிப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்திருந்தனர். காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்து, 700-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வரிசையில் காத்திருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்ற பெண் திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு! ரூ.100-ஐ தொட்டது டீசல்! விடிந்ததும் விடியாததுமாய் வாகன ஓட்டிகளுக்கு பேரதிர்ச்சி!

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சாமுண்டீஸ்வரி ஏற்கனவே முதல்வர் தனிப்பிரிவில் ஒரு மனு அளித்திருந்ததாகவும், அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற விரக்தியால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை சமாதானப்படுத்திய போலீசார், அவர் அளித்த மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். தொடர்ந்து அவரிடம் விரிவான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்த இடத்திலேயே தற்கொலை முயற்சி நடைபெற்றது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் காரணமாக தலைமைச் செயலகம் முன்பு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், போலீசார் நிலைமையை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

இதையும் படிங்க: நாளை சொந்த தொகுதி செல்கிறார் முதல்வர் விஜய்!! ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்! 3 நாளில் தீர்வு உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share