டெல்லியை சூடாக்கிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! பார்லி.,யில் நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு!
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதும் 12 மணி நேரம் விவாதம் நடக்கும். நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், மத்தியில் முக்கிய அரசியல் நிகழ்வு ஒன்று இன்று (ஏப்ரல் 16) நடைபெற்றது. பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது.
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில், 2023-ல் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை (நாரி சக்தி வந்தன் அகினியம்) செயல்படுத்துவதற்கான அரசியல் சாசன திருத்த மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் லோக்சபாவில் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதில் லோக்சபா இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தும், தொகுதி மறுவரையறை (டெலிமிடேஷன்) உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன. சபாநாயகர் ஓம் பிர்லா, 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்றும், நாளை (ஏப்ரல் 17) மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்தார்.
இதையும் படிங்க: இந்திய பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கணும்!! குற்றம் சாட்டும் காங்.,!
கூட்டத்தொடர் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பி வேணுகோபால் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினார். முஸ்லீம் பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார்.
அதற்கு மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ மற்றும் அமித்ஷா பதிலளித்தனர். “பெண்களை மத அடிப்படையில் பிரித்து பார்க்கக் கூடாது. அரசியலமைப்பு சட்டத்தில் மத ரீதியான இட ஒதுக்கீட்டுக்கு இடமில்லை” என்று அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்த சிறப்புக் கூட்டத்தொடர் ஏப்ரல் 18 வரை நடைபெற உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ‘இண்டி’ கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களின் பங்கு கணிசமாக அதிகரிக்கும். இது பெண் வல்லமைக்கு பெரும் ஊக்கமாக அமையும் என அரசு தரப்பு நம்புகிறது. எதிர்க்கட்சிகள் உள் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!