×
 
☰

ஆசிய தடகளத்தில் வெள்ளி வென்ற வித்யா, விஷாலுக்கு தலா ₹50 லட்சம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஆசிய விளையாட்டு 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப்பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா வீரர் விஷால் ஆகியோருக்கு தலா ரூ 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்த இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள நட்சத்திரங்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா ₹50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் பிரிவில், இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவின் இறுதிச் சுற்றில், இந்தியக் குழு அபார வேகத்தை வெளிப்படுத்தி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

நான்கு பேர் மட்டுமே கொண்ட இந்த இந்தியத் தொடர் ஓட்டக் குழுவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் தடகள வீரர் விஷால் தென்னரசு கயல்விழி (விஷால் டி.கே.) ஆகிய இருவரும் அங்கம் வகித்துத் தங்களின் அசாத்திய ஓட்டத்தால் வெற்றிக்கு வித்திட்டனர் என்பது தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்த மகத்தான பெருமையாகும்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு முதல் பதக்கம்... துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணிக்கு வெள்ளி!

இச்சாதனையைக் கொண்டாடும் வகையில், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள முதலமைச்சர் விஜய், ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக் குழுவில், 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமில்லாமல், தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும் என்று நெகிழ்ச்சியோடு பாராட்டியுள்ளார்.

வீரர்களின் சாதனையை அங்கீகரித்து அரசு நிதியுதவியை அறிவித்த முதலமைச்சர், தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ₹50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் இருவரும் தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.

இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைத்திட வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுராந்தகத்தில் நாளை முதல்வர் விஜய் தேர்தல் பிரச்சாரம்! 5,000 பேருக்கு மட்டுமே கியூஆர் அனுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share