விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: இண்டிகோ நெருக்கடியால் அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
விமான நிறுவனங்கள் விதிகளை மீறி விமானக் கட்டணங்களை கூடுதலாக வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் நாடு முழுவதும் திடீரெனப் பாதிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட கடும் பயண நெருக்கடி மற்றும் வழக்கமான கட்டண உயர்வை விடப் பல மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு இன்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
விமானச் சேவைகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் முன்னறிவிப்பற்ற ரத்து காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்குள்ளான நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திவிட்டதாகப் புகார்கள் குவிந்தன. குறிப்பாக, குறுகிய தூரப் பயணங்களுக்கான கட்டணங்களும் கூட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தச் சூழலில்தான், மத்திய அரசு களத்தில் இறங்கி உள்ளது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இத்தகைய நெருக்கடியான காலங்களில் நியாயமற்ற வகையில் அதிகக் கட்டணம் வசூலிப்பது ஒப்புக் கொள்ள முடியாதது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து விதிகளை மீறிக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: "அமெரிக்காவுக்கு உரிமை இருக்கும்போது இந்தியாவுக்கு ஏன் தடை? ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புதின் கேள்வி!
விமான நிறுவனங்களின் இந்தப் போக்கு, பயணிகளின் நலனை முற்றிலும் புறக்கணிப்பதாகும் என்றும், உடனடியாகச் சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு நியாயமான கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்துள்ளது. இந்த உடனடி உத்தரவின் மூலம், விமானத் துறையில் நிலவிய கட்டணக் குளறுபடிகளுக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி கவலையில்லை! ரயில்வேயை நோக்கி படையெடுத்த பயணிகள்: விரைந்து செயல்பட்ட இந்திய ரயில்வே!