உணவுப் பஞ்சத்தின் விளிம்பில் பாகிஸ்தான்? இந்தியா வைத்த 'செக்'கால் அதிகரிக்கும் நெருக்கடி!!
இப்போதைய நீர் தட்டுப்பாடு அந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த நிலையில், பாகிஸ்தான் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அக்டோபர் 1 முதல் தொடங்கும் ரபி பருவத்தில் நாட்டில் சுமார் 25 சதவீத நீர் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உணவுப் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய நீர்த்தேக்கங்களான தர்பேலா மற்றும் மங்லாவில் தற்போதைய நீர் இருப்பு 9.5 மில்லியன் ஏக்கர் அடிக்கும் குறைவாக உள்ளது. இது 2021க்குப் பிறகு ரபி பருவத்திற்கு முன் பதிவான மிகக் குறைந்த அளவாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 13 மில்லியன் ஏக்கர் அடி நீர் இருந்தது. ரபி பருவத்திற்கு தேவையான நீர் அளவு 37 முதல் 38 மில்லியன் ஏக்கர் அடி என்றாலும், கிடைக்கக்கூடியது வெறும் 21 முதல் 22 மில்லியன் ஏக்கர் அடியாகவே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் முக்கியப் பயிரான கோதுமை உற்பத்தி பெரும் சவாலை எதிர்கொள்ளும். கடந்த ரபி பருவத்தில் நீர் பற்றாக்குறை இல்லாத போதிலும் கூட, கோதுமை உற்பத்தியில் இரண்டு மில்லியன் டன்னுக்கும் அதிகமான குறைபாடு ஏற்பட்டது. இப்போதைய நீர் தட்டுப்பாடு அந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தும்.
இதையும் படிங்க: மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு குறி..!! அதிரடி தாக்குதல் நடத்திய பாக்.,!! பதற்றம் உச்சம்!!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நீர் ஒப்பந்தம் 2025 ஏப்ரலில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவால் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்தானது. மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகியவற்றின் பெரும்பகுதி நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தியா தரப்பு தற்போது தரவுப் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் நிறுத்திவிட்ட நிலையில், நீண்டகாலத் திட்டங்களால் நீர் ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானில் நிலவுகிறது.
இதனால் விவசாயம் மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார அடித்தளமும் அழுத்தத்திற்கு உள்ளாகும். மாகாணங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு பிரச்சினையும் மீண்டும் தலைதூக்கும் வாய்ப்புள்ளது. சிந்து நதி அமைப்பு ஆணையம் (IRSA) மூன்று அடுக்கு முறையில் பங்கீட்டை முடிவு செய்ய உள்ளது. பலோசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் பற்றாக்குறையிலிருந்து விலக்கப்பட்டு, பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் அதிக சுமையை ஏற்க வேண்டியிருக்கும்.
இது இரு மாகாணங்களுக்கிடையே பதற்றத்தை அதிகரிக்கும். IRSA தொழில்நுட்பக் குழு ஏற்கனவே பங்கீட்டு மதிப்பீடுகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. குறைந்த நீரை எப்படி சமமாக நிர்வகிப்பது என்பதே தற்போதைய முக்கிய சவாலாக உள்ளது.
இதையும் படிங்க: பாக். அழகு கிரீம்களில் அதிக பாதரசம்.. சிறுநீரக பாதிப்புக்குள்ளான 18 பெண்கள்..!! இந்திய மருத்துவர்கள் வார்னிங்!!