திருச்செந்தூர் கடற்கரையில் திடீர் பரபரப்பு... 10க்கும் மேற்பட்டோருக்கு கால் முறிவு... அதிர்ச்சி சம்பவம்...!
திருச்செந்தூர் கடலில் நீராடிய பக்தர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கால்முறிவு ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே போல் இன்று விடுமுறை தினம் என்பதாலும் திருச்செந்தூருக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று கோவில் முன்புள்ள கடலில் நீராடி வருகின்றனர். இதற்கிடையில் கடலில் திடீரென ஏற்பட்ட அலையில் பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை போராடி மீட்டனர்.
இதில் கேரளா பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற 13 வயது சிறுமி காலில் காயம் ஏற்பட்டது. அதே போல் சாத்தூரைச் சேர்ந்த மாரிசாமி, திண்டிவனத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கமுதியைச் சேர்ந்த அன்னலெட்சுமி, மதுரையைச் சேர்ந்த ஆனந்தவல்லி உள்பட 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதையும் படிங்க: புடின் என்ன பேசினார் சொல்லுங்க? அமெரிக்கா விரையும் ஜெலன்ஸ்கி.. ஆக., 18ல் டிரம்புடன் சந்திப்பு!!
இதையடுத்து அவர்கள் அனைவரும் கோவிலில் நிறுத்தப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டு, கோவிலில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையும், கடலில் நீராடும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே பக்தர்களை பாதுகாப்பாக நீராடும்படி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு நோபல் பரிசா? ஓரே ஒரு கண்டிஷன் தான்!! ட்விஸ்ட் வைத்த ஹிலாரி கிளிண்டன்!!