பவர் கட் முதல் சட்டம் - ஒழுங்கு வரை.. 100 நாட்களில் விஜய் ஆட்சியின் முக்கிய சொதப்பல்கள்!! லிஸ்ட் இதோ!!
கரூர் போன்ற பகுதிகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற வாக்குறுதி, 20 ரூபாயாக உயர்ந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்த தமிழக வெற்றிக் கழக அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் பதவியேற்று இன்றுடன் நூறு நாட்களை நிறைவு செய்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த ஆட்சி, முதல் நாளிலேயே பல அதிரடி நிர்வாக உத்தரவுகளை வெளியிட்ட போதிலும், மாநிலத்தின் நிதி நிலை, நிர்வாக வேகம், விலைவாசி, சட்ட ஒழுங்கு போன்ற அடிப்படை துறைகளில் தொடர்ச்சியான சவால்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொண்டு வருகிறது.
தேர்தல் பிரசாரத்தில் “உங்க விஜய் வருகிறேன்” என்று உறுதியளித்த முதலமைச்சர், பல முக்கிய வாக்குறுதிகளில் காலதாமதம் மற்றும் நிர்வாக குழப்பங்களால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நூறு நாட்களின் சாதனைகளும் சவால்களும் இணைந்த ஒரு முழுமையான மதிப்பீட்டை இங்கே காணலாம்.
மின்சார இலவசத் திட்டமும் உயர்ந்த கட்டணங்களும்: வீட்டு உபயோக நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனால் சுமார் 1.42 கோடி குடும்பங்கள் பயன் பெறத் தொடங்கின. ஆனால் ஏற்கனவே ₹1.5 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமையில் இருக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (டான்ஜெட்கோ) ஆண்டுதோறும் சுமார் ₹4,850 கோடி கூடுதல் மானியச் சுமை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "NO TENSION"..! அதான் ஆன்லைன் இருக்கே... இணைய வழி பத்திரப்பதிவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய்..!!
இலவசத் திட்டம் இருந்தாலும், ஜூலை மாத மின் கட்டணங்கள் பல இடங்களில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்ததாக நுகர்வோர் குற்றம் சாட்டினர். மின் வாரியத்தின் முதற்கட்ட சோதனையில் சுமார் 3.70 லட்சம் இணைப்புகளில் வழக்கத்திற்கு மாறான உயர்வு கண்டறியப்பட்டது. இதில் 15,000 வீடுகள் 1,000 யூனிட்டுக்கு மேல் பயன்பாட்டுப் பிரிவிலும், ஒரு லட்சம் வீடுகள் 500-1,000 யூனிட் பிரிவிலும் திடீரென சேர்க்கப்பட்டன.
கோடை வெப்பம் காரணமாக ஏசி பயன்பாடு அதிகரித்திருக்கலாம் என்றாலும், மீட்டர் ஆய்வு மற்றும் கணக்கீட்டில் ஏற்பட்ட தாமதம், பழுதுபட்ட மீட்டர்களை சரியாக பராமரிக்காதது போன்ற தொழில்நுட்ப மற்றும் நிர்வாக குறைபாடுகளே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் மின் வாரியத்திற்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடலும் வருவாய் இழப்பும்: பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு 150 மீட்டர் சுற்றளவில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடியது சமூக நல ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த முடிவால் ஆயத்தீர்வை மற்றும் வாட் வரி மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய காலாண்டு வருவாயில் சுமார் ₹1,680 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாற்று வரிக் கொள்கை உருவாக்காததால் பிற துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் நிலவுகிறது. அதே நேரத்தில், மலிவான பாட்டில்கள் மற்றும் கலாச்சார மாற்றம் எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. கரூர் போன்ற பகுதிகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற வாக்குறுதி, 20 ரூபாயாக உயர்ந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சட்டமன்ற வெற்றிடங்களும் குதிரைப்பேர புகார்களும்: தவெக 108 உறுப்பினர்களுடன் சிறுபான்மை ஆட்சியாகத் தொடங்கியது. ஆறு அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகல் மற்றும் முதலமைச்சர் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் தற்போது ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன. ஆறு அதிமுக உறுப்பினர்கள் தவெகவுக்குச் சென்றது குதிரைப்பேரம் என்ற புகார் உச்ச நீதிமன்றத்தில் வழக்காகத் தொடரப்பட்டுள்ளது. இடைத்தேர்தல்கள் பல்வேறு வழக்குகளால் தள்ளிப்போவதால் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் முடங்கியுள்ளன. ஆட்சி தொடர்வது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
சொத்து வரி உயர்வு திரும்பப் பெறப்பட்டது: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டதாக வரைகாலை ரசீதுகள் அனுப்பப்பட்டன. முகப்பேரில் அரை ஆண்டு வரி ₹13,000-லிருந்து ₹63,000 ஆகவும், காரப்பாக்கத்தில் ₹895-லிருந்து ₹1,835 ஆகவும் உயர்ந்தது. மேற்கு மாம்பலம் மற்றும் கிண்டி போன்ற பகுதிகளிலும் எந்த மாற்றமும் இல்லாமல் வரி இரட்டிப்பாகியது. கடும் எதிர்ப்பு காரணமாக அரசு உடனடியாக உயர்வை நிறுத்தி, பழைய விகிதத்தையே தொடர உத்தரவிட்டது. சாலை பராமரிப்பு, தெருவிளக்கு, கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முக்கிய வருவாயாக இருக்கும் இந்த வரியில் திடீர் உயர்வு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பயிர்க்கடன் தள்ளுபடியும் டெல்டா விவசாயிகளின் அதிருப்தியும்: தேர்தல் வாக்குறுதியின்படி, கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளின் சுமார் ₹5,932 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ₹50,000 வரை முழுத் தள்ளுபடி, அதற்கு மேல் ₹35,000 தள்ளுபடி என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. குறு விவசாயிகளுக்கு ₹3,599 கோடி, சிறு விவசாயிகளுக்கு ₹1,995 கோடி, பெரு விவசாயிகளுக்கு ₹337 கோடி என விநியோகிக்கப்பட்டது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சராசரி கடன் ₹1.35 லட்சம் இருப்பதால் 62 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் முழு நிவாரணம் பெற முடியாமல் தவித்தனர். ஆனால் ரூ.75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.75 ஆயிரம் வரை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் இன்று அறிவித்துள்ளார். 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார்.
நிர்வாகத் தேக்கமும் வாக்குறுதிகள் நிறைவேறாததும்: புதிய அமைச்சர்களின் அனுபவமின்மை காரணமாக அனைத்து முக்கிய முடிவுகளும் முதலமைச்சரின் தனிச் செயலகம் வழியாகவே எடுக்கப்படுகின்றன. இதனால் சுமார் 1,400 அரசு உத்தரவுகள் மற்றும் டெண்டர் ஒப்புதல்கள் தேக்கமடைந்துள்ளன. நெடுஞ்சாலை மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளில் களப்பணிகள் வேகம் இழந்துள்ளன. மகளிர் உரிமைத் தொகை ₹2,000, இலவச சிலிண்டர், மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முந்தைய திமுக திட்டங்களுக்கு வெற்றி ஸ்டிக்கர் ஒட்டினால் போதுமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு: வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 104 நிறுவனங்களுடன் ₹1.02 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும், முதல் நூறு நாட்களில் வெறும் 8 சதவீத திட்டங்களுக்கு மட்டுமே சிப்காட் நில ஒதுக்கீடும் சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. தூத்துக்குடியில் ₹1,720 கோடி மதிப்பில் அமைய இருந்த ஹவாசுங் ஆலை ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் தனது வரலாற்றில் முதன்முறையாக ஆந்திராவின் தடா பகுதியில் கிரீன்ஃபீல்டு ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இது தமிழகத்தின் தொழில்துறைக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
பெரிய திட்டங்களில் ஆய்வுத் தேக்கம்: ₹20,000 கோடி மதிப்பிலான பரந்தூர் புதிய பசுமை விமான நிலைய நில எடுப்பு மற்றும் 20.6 கி.மீ சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் பல்வேறு தொகுப்புகளை மறுஆய்வு செய்வதற்காக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் கட்டுமான நிறுவனங்களுக்கு தினசரி இழப்பீடு அதிகரித்து, திட்ட மதிப்பீடும் உயர்ந்து வருகிறது. சென்னையின் பல முக்கிய பாலங்கள் மற்றும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
சட்ட ஒழுங்கு சீர்குலைவு: புதிய அரசு பொறுப்பேற்ற 140 மணி நேரத்திற்குள் 24 கொலைகள் நடந்தன. இதுவரை 200க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவாகியுள்ளன. திருவொற்றியூர் பள்ளியில் மாணவர் தனுஷ் சக மாணவர்களால் கொல்லப்பட்டார். கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் பொறியியல் மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்டார். பீளமேட்டில் நவீன் பட்டப்பகலில் குத்திக் கொல்லப்பட்டார். திருநெல்வேலி வீரவநல்லூரில் காளிமுத்துவும் அவரது 5 வயது மகனும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். புது வண்ணாரப்பேட்டையில் விஷ்ணு தாக்கப்பட்டு இறந்தார்.
எதிர்க்கட்சிகள் நிர்வாக அனுபவமின்மை, உளவுத்துறை தோல்வி மற்றும் போலீஸ் கண்காணிப்பு குறைபாட்டைக் குற்றம் சாட்டுகின்றன. இந்த நூறு நாட்கள், புதிய அரசின் உற்சாகத்தையும் அனுபவமின்மையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தியுள்ளன. வாக்குறுதிகளும் யதார்த்தமும் இடையே உள்ள இடைவெளி குறைக்கப்படாவிட்டால், மக்களின் நம்பிக்கை மேலும் சோதனைக்கு உள்ளாகும் என்பதே அரசியல் வட்டாரங்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!