“100 இல்ல; இனி 125 நாட்கள்..” - VB-G RAM G திட்டம் இன்று முதல் அமல்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம் இன்று முதல் அமலாகிறது. இத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னவென பார்க்கலாம்...
100 நாள் வேலைத் திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள வி.பி.ஜி. ராம்ஜி திட்டம் (VPG Ramji Scheme) நாடு முழுவதும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளையும் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (100 நாள் வேலைத் திட்டம்) அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த மத்தியபாஜக அரசு, அதற்கு மாற்றாக ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் வி.பி.ஜி. ராம்ஜி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
புதிய திட்டத்தின்படி, வேலைவாய்ப்பு 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், திட்டத்திற்கான நிதியில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் ஏற்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலையிலேயே குட் நியூஸ்..!! வணிக சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு..!!
இந்தத் திட்டத்திற்காக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு 7,585 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள நிலையில், மாநில அரசும் தனது பங்காக 557 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் "வளர்ச்சி அடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்" என்ற பெயரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திட்டப் பணியாளர்களைத் தேர்வு செய்து திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை கிராமப் பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தனித்துவமான எண்ணுடன் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், குறிப்பாக ஆதரவின்றி தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பணியாளர்களின் வருகைப் பதிவு தினசரி பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் வாரத்திற்கு ஒருமுறை பணியாளர்களின் வங்கிக் கணக்கு அல்லது அஞ்சலக சேமிப்புக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான கூலி 5 நாட்களுக்குள் வழங்கப்படாவிட்டால் தாமதமான ஒவ்வொரு நாளும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். வேலைக்கோரி விண்ணப்பித்த 15 நாட்களில் வேலை வழங்கப்படாவிட்டால் வேலை இழப்பு உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அரை மீசை பாரதிக்கிட்ட அப்போ பேசிக்கிறேன்..." - ஆர்.எஸ்.பாரதியை மீண்டும் சீண்டிய மாணிக்கம் தாகூர்...!