×
 

தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!

தமிழ் மக்களையும் அந்தப் பெரும்புலவரையும் அவமதிப்பது போல் உணரப்பட்டதாக எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மாநில கீதமான தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைத்து, இறுதியில் தேசிய கீதத்தை ஒலிக்க வழிவகை செய்யுமாறு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தில், ராஜ்பவன் தெளிவான முன்கூட்டிய வழிகாட்டுதல்களை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்குக் காரணம், கடந்த ஜூலை 28 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா. அங்கு ராஜ்பவன் அறிவுறுத்தலின்படி முதலில் வந்தே மாதரம், அடுத்து தேசிய கீதம், மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பெயரிலேயே அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இப்படி மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டது, தமிழ் மக்களையும் அந்தப் பெரும்புலவரையும் அவமதிப்பது போல் உணரப்பட்டதாக எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2021-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்ட இந்தப் பாடல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இசைக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்றியபோது கூட தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவடைந்ததை எம்.பி.க்கள் நினைவுகூர்ந்துள்ளனர். கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மாநிலக் கீதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் மரபை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: "தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யச் சதி!" - வந்தே மாதரம் மசோதாவிற்கு கனிமொழி எதிர்ப்பு!

இந்தச் சர்ச்சை முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவிலேயே தொடங்கியிருந்தது. ஆனால் அது ஆளுநர் நிகழ்ச்சி என்பதால் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டதாக தவெக தரப்பினர் விளக்கம் அளித்தனர். பட்டமளிப்பு விழாவிற்கு முன்னரே துணைவேந்தர் சந்திரசேகர் ராஜ்பவன் வழிகாட்டுதலைப் பகிரங்கப்படுத்தியதால் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் அந்த விழாவைப் புறக்கணித்தார். மாணவர்கள் மத்தியிலும் அதிருப்தி எழுந்தது.

ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கார்த்தி சிதம்பரம், தொல்.திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்ட காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, ஐ.மு.லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கையொப்பமிட்டுள்ள இந்தக் கடிதத்தில், இது புகார் அல்ல, கண்ணியத்துடனும் சர்ச்சைகள் இன்றியும் அரசு நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கோ மனோன்மணியம் சுந்தரனாருக்கோ எந்த அவமரியாதையும் இல்லை என பொதுமக்களுக்கு உறுதியளிக்கவும் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மொழியுரிமையில் கை வைத்தால் சகித்து கொள்ள மாட்டோம்! தவெக எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share